IPL 2024: மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு! சூர்யகுமார் யாதவ் விளையாடுவது சந்தேகம்!

Suryakumar Yadav IPL 2024: தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் குணமடைந்து வருகிறார் என்றும், ஆனால் ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.  இன்னும் சூர்யகுமார் யாதவ் முழுவதும் குணமடையவில்லை என்பதால் எந்த வித உத்தரவாதமும் தர முடியாது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் விளையாடாமல் இருந்து வருகிறார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டு ஜனவரி மாதம் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஐபிஎல் 2024 துவக்க ஆட்டத்தில் விளையாடுகின்றன. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024ல் தனது முதல் போட்டியை மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக விளையாடுகிறது. பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வந்த தகவலின்படி, இந்த ஐபிஎல் சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் சூர்யகுமார் பங்கேற்க என்சிஏ மருத்துவக் குழு அனுமதி வழங்காது என்று கூறப்படுகிறது.  “சூர்யகுமார் யாதவ் தற்போது மறுவாழ்வு பாதையில் உள்ளார். அவர் நிச்சயமாக ஐபிஎல்-லில் விளையாடுவார். ஆனால் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் தான். NCAன் மருத்துவக் குழு முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடுவதற்கு அனுமதி வழங்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்தது.

Suryakumar Yadav is doubtful for the first 2 games in IPL 2024. [PTI]

– vs GT on 24th & vs SRH on 27th….!!!! pic.twitter.com/LqIDQU5yZg

— Johns. (@CricCrazyJohns) March 12, 2024

சூர்யாகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஆனால் அவர் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ எதையும் பதிவேற்றவில்லை, இது அவர் இன்னும் முழுவதும் குணமடையவில்லை என்பதை காட்டுகிறது.  கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது சூர்யகுமாருக்கு காயம் ஏற்பட்டது.  அதன் பிறகு எந்த ஒரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை.  ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷான் பங்கேற்ற டிஒய் பாட்டீல் டி20 போட்டியிலும் அவர் விளையாடவில்லை. ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண நிகழ்ச்சிகளில் தான் சூர்யகுமார் கடைசியாக பங்கேற்றார். 

60 டி20 போட்டிகளில் 171 பிளஸ் ஸ்டிரைக் ரேட் மற்றும் 2,141 ரன்களுடன் இந்தியாவின் டி20 அணியின் முக்கியமான வீரராக சூர்யகுமார் யாதவ் உள்ளார்.  இதுவரை நான்கு டி20 சதங்களை அடித்துள்ளார். ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு இந்தியாவில் நடைபெற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார் சூர்யகுமார்.  இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் முக்கிய வீரராக சூர்யகுமார் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால் அதற்குள் சூர்யகுமார் முழு உடற்தகுதி பெற வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.