நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் 9-ம் தேதி நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான முதல் தேசிய லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்) சுமார் 1.13 கோடி வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ. 8,065.29 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்காடிகளின் சிரமத்தைக் குறைக்கவும், நீதி வழங்குவதில் உள்ள தாமதத்தை தவிர்க்கவும், வழக்கின் தரப்பினர்களே மக்கள் நீதிமன்றத்தில், நீதிபதி மற்றும் வழக்குரைஞர்களின் உதவியுடன் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே பேசி தீர்வு காணும் முறையே “லோக் அதாலத்” எனப்படும் “மக்கள் நீதிமன்றம்” ஆகும்.
தேசிய சட்டச் சேவைகள் ஆணையத்தின் (NALSA) உத்தரவின்பேரில், ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற மக்கள் நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு, தேங்கி கிடக்கும் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு, மக்களுக்கு நிவாரணமும், இழப்பீடும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான முதலாவது தேசிய அளவிலான லோக் அதாலத், நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் மட்டும் சுமார் 1.13 கோடி வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.8,065.29 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில், ஏற்கெனவே நீதிமன்றங்களில் இருந்த 17,14,056 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள 96,46,088 வழக்குகள் என மொத்தம் 11,360,144 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மாநில சட்டச் சேவை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது, தேசிய சட்டச் சேவைகள் ஆணையத்தின் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சஞ்சீவ் கண்ணா தலைமையில், தேசிய சட்டச் சேவைகள் ஆணையச் சட்டம் 1987 மற்றும், தேசிய சட்டச் சேவைகள் ஆணைய (மக்கள் நீதிமன்றம்) விதிமுறைகள், 2009-ன் படி நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நீதிமன்ற முறையானது பிரச்னைகளை தரப்பினர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி எளிதாகத் தீர்ப்பதற்கான மிகச் சிறந்த மாற்றுமுறை தீர்வாகவுள்ளது. இதன் மூலம் தேசிய சட்டச் சேவைகள் ஆணையத்தின் குறிக்கோளான `விரைவான, எளிதான நீதி’ என்பது சாத்தியமாகியிருக்கிறது என்றே கூறலாம்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம், வழக்காடிகள் அனைவருக்கும் தடைகளைத் தாண்டி, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும்படியான, நேரிடையாகப் பேசி, நீதியைப் பெற்றுக் கொள்ளும், பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கும் ஒரு மாற்றுமுறை அமைப்பாக தேசிய சட்ட ஆணையம் அமைந்துள்ளது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் விசாரணைக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள வழக்குகள், சிறு தகராறுகள், அடிதடி போன்ற குற்றவியல் வழக்குகள், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி, ஏலம் தொடர்பான வழக்குகள், வருவாய்த்துறை வழக்குகள், தொழிலாளர் துறை சார்ந்த வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், திருமணம் தொடர்பான வழக்குகள் (விவாகரத்து தவிர), நில ஆக்கிரமிப்பு வழக்குகள், அறிவுசார் சொத்துரிமை வழக்குகள், நுகர்வோர் வழக்குகள், நிலம் தொடர்பான பிரச்னைகள் போன்ற உரிமையியல் வழக்குகள் என அனைத்து வழக்குகளையும் தேசிய சட்டச் சேவைகள் ஆணையம், மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணங்கள் பெற்றுத் தந்து வழக்கை விரைந்து முடிக்க பேருதவி செய்கின்றன என்றால் மிகையாகாது.