தீர்க்க சுமங்கலி வரமும் செல்வ வளமும் அருளும் காரடையான் நோன்பு – கடைப்பிடிப்பது எப்போது, எப்படி?

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்கள் அனைத்திலும் மிகவும் முக்கியமானது காரடையான் நோன்பு.

பங்குனி மாதம் பிறக்கும் வேளைக்கு முன் கொண்டாடப்பட வேண்டிய விரதமான காரடையான் நோன்பு புராண இதிகாசங்களால் போற்றப்படும் ஒன்று. இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் பெண்களுக்கு நித்திய சுமங்கலி பாக்கியம் கிடைப்பதோடு வீட்டிலும் செல்வ வளம் சேரும். வீட்டில் இருக்கும் ஆண்களின் ஆரோக்கியம் நீடித்திருக்கும். இந்த விரதத்தைக் கடைப்பிடித்துப் பலன் அடைந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

சத்தியவான் சாவித்ரி கதை

சாவித்ரி விரதம்

இந்த விரத நோன்பிற்கு சாவித்ரி விரதம் என்றும் பெயர் உண்டு. மனம் ஒன்றி வாழ்ந்த தம்பதிகளுக்கு உதாரணமாகச் சொல்லப்படுபவர்கள் சத்தியவான் சாவித்ரி ஆவர். இருவரும் ஒருநாள் காட்டில் வாசம் செய்தபோது சத்திய வானின் உயிரை யமன் கவர்ந்துசெல்லும் நேரம் வந்தது. அப்போது சாவித்ரியின் கற்பின் திறத்தால் அவளால் யமனைக் காணமுடிந்தது. தன் கணவனை விட்டுவிடச் சொல்லி அவள் வேண்டினாள். ஆனால் யமனோ, ‘தான் கவர்ந்த உயிர்களை ஒருபோதும் திருப்பித் தர முடியாது’ என்று சொல்லி நடக்கத் தொடக்கினான்.

அப்போது சாவித்ரி மனம் தளராமல் அன்னை காமாட்சியை வேண்டத் தொடங்கினாள். காட்டில் கிடைத்த பொருள்களைக் கொண்டு தன் பூஜைக்கான பொருள்களைத் தயார் செய்தாள். அன்னை காமாட்சிக்கு அடையும் வெண்ணெயும் சமர்ப்பணம் செய்வது விசேஷம். ஆனால் காட்டில் இவற்றுக்கு சாவித்ரி எங்கு போவாள்? எனவே மண் கொண்டு செய்த அடையையும் செடிகளிலிருந்து எடுத்த பாலை வெண்ணெயாகவும் பாவித்து அன்னைக்கு பக்தியோடு நிவேதனம் செய்தாள்.

இவற்றை எல்லாம் பார்த்த யமனுக்கு வியப்பு ஏற்பட்டது. மனம் இரங்கி, `உனக்கு ஒரு வரம் தருகிறேன்’ என்றான்.

அன்னையிடம் வேண்டிய வேண்டுதல் பலித்தது என்பதைப் புரிந்துகொண்ட சாவித்ரி, `போரில் பின்வாங்காத வீரமுடைய புத்திரர்கள் வேண்டும்’ என்று கேட்டாள்.

அன்னை காமாட்சியின் அருளால் யமனுக்கு மதிமயக்கம் உண்டாக அவன் சிந்திக்காமல், `தந்தேன்’ என்றான். அடுத்த கணம் தன் தவற்றை உணர்ந்த யமன் சத்தியவான் உயிரைத் திரும்ப அளித்து அவர்கள் இழந்த சகல செல்வங்களையும் மீண்டும் பெறும்படி ஆசீர்வதித்தான்.

மனத்தை ஆள்பவள் அன்னை காமாட்சி

இந்த உலகில் எதைப் பெற வேண்டும் என்றாலும் அவற்றை முதலில் மனத்தால் நினைக்க வேண்டும். மன வலிமை இருந்தால் எண்ணிய எண்ணத்தின் படிச் செயல்பட்டு வாழ்வில் இலக்கை அடையலாம். இதைத்தான் மனவியல் நிபுணர்கள் இன்று சொல்கிறார்கள். அன்னைக் காமாட்சி மனத்தின் அதிபதி என்கிறது புராணம். அவள் அருள் இருந்தால் மனம் அலைபாயாது எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும். சாவித்ரி வாழ்வில், அவள் மனம் கலங்காது அன்னையை வேண்டியதும் யமன் மனம் தடுமாறி வரம் தந்தான். மன வலிமை இருந்தால் எதிரியும் நண்பனாவான். அவர்கள் மூலமும் ஆதாயம் கிடைக்கும் என்பதுதான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் உண்மை.

காரடையான் நோன்பு மேற்கொண்டு அன்னைக் காமாட்சியை வழிபட்டால் நம் மனத்தில் சிந்தனை குவியும். மன வலிமை அதிகரிக்கும். மனம் செம்மையானால் ஆரோக்கியமும் பெருகும். செல்வம் சேரும். எனவேதான் அன்னைக் காமாட்சியை வழிபட இந்த விரதத்தைப் பரிந்துரைத்தார்கள் முன்னோர்கள்.

கடைப்பிடிப்பது எப்படி?

விரத நாளில் காலையிலேயே குளித்து தூய ஆடைகளை அணிந்து பூஜையறையைச் சுத்தம் செய்து, கோலமிட வேண்டும். பூஜைக்குத் தேவையான கலசம் வைக்க வேண்டும். கலசம் வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் அம்பிகையின் படத்தை மலர் சாத்தி வழிபடலாம். கலசம் அல்லது அம்பிகையின் படத்தின் மீது நோன்புச் சரடை வைக்க வேண்டும். அம்பிகைக்கு உகந்த அஷ்டோத்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

பூஜைக்கு நிவேதனங்களாக வெண்ணெயையும் அடையையும் சமர்ப்பித்து, `உருக்காத வெண்ணெயும் உவப்பான காரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் நீங்காதிருக்க வேண்டும்’ என்று சொல்லி வேண்டிக்கொள்ள வேண்டும். பின்பு வீட்டில் இருக்கும் மூத்த சுமங்கலிகளிடம் கொடுத்து நோன்புச் சரடைக் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் மூத்த பெண்கள் இல்லாத நிலையில் கணவனோ அல்லது பிற சுவாசினிகளோ அதைக் கட்டிவிடலாம். இந்த விரதத்தைக் கல்யாணமாகாத பெண்கள் மேற்கொண்டால் விரைவில் திருமண வரம் கிட்டும். செல்வ வளம் சேரும்.

காரடையான் நோன்பு உப்பு அடை

நேரம் : நாளை (14.3.2024) காலை சரடு மாற்றும் நேரம் : பகல் 11.00 முதல் 12.00 வரை

சரடு கட்டிக்கொள்ளும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச

ஹரித்ரம் தாராம்யஹம்

பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம்

ஸுப்ரீத பவ ஸர்வதா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.