மைசூரு : ”காது கேளாத குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அறுவை சிகிச்சை மற்றும் செவித்திறன் கருவி மூலம் குணப்படுத்தி, செவித்திறன் குறைபாடு இல்லா கர்நாடகாவை உருவாக்குவதே எங்கள் நோக்கம்,” என, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
மைசூரில் உள்ள அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தில் நேற்று நடந்த ‘காக்லியர் உள்வைப்பு’ திட்டத்தை ‘ஸ்ரவண சஞ்சீவினி திட்டம்’ என பெயர் மாற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:
சிலர் பிறவியிலேயே காது கேளாதவர்களாக இருப்பர். ‘காக்லியர்’ கருவி பொருத்துவதன் மூலம், குழந்தைகளுக்கு கொஞ்சம் காது கேட்க வைக்கலாம்.
இதற்கு சிகிச்சை பெற, லட்சக்கணக்கான ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. ஏழைகளுக்கு இது சாத்தியமற்றது. எனவே தான் அரசு சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
காது கேளாத குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அறுவை சிகிச்சை மற்றும் செவித்திறன் கருவி மூலம் குணப்படுத்தி, செவித்திறன் குறைபாடு இல்லா கர்நாடகாவை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
கடந்த ஓராண்டில் காது கேளாத 353 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகா உள்ளது. மாநிலத்தில் 27 மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்த கருவியை பொருத்திய பின், குழந்தையை ஓராண்டு கவனிக்க வேண்டும். காது கேளாத குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. அத்தகைய குழந்தைகளை சிறப்பு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்.
அத்தகைய குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்தால், மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகி, சிறந்த கல்வி பெற்று சமூகத்தில் முன்னேறலாம்.
காது கேளாமைக்கு சிகிச்சை அளிக்க நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர் கவலைப்பட வேண்டாம். தாய், சேய் நலம் காப்பதே எங்கள் துறையின் முதல் முன்னுரிமை.
இவ்வாறு அவர் பேசினார்.
� ’காக்லியர் உள்வைப்பு’ திட்டத்தை, ‘ஸ்ரவண சஞ்சீவினி திட்டம்’ என பெயர் மாற்றும் நிகழ்ச்சியில், காது கேளாத குழந்தைகளுக்கு கருவி வழங்கிய அமைச்சர் தினேஷ் குண்டுராவ். � காது கேட்கும் கருவி அணிந்த பின், முதன் முறையாக ஒலியை கேட்டு பூரிப்படைந்த சிறுமியர். இடம்: மைசூரு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்