Musheer Khan: சச்சினின் 29 ஆண்டுக்கால சாதனை; அவர் முன்னிலையிலேயே முறியடித்த சர்ஃபராஸ் தம்பி முஷீர்!

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை – விதர்பா அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இன்று அதில் நான்காவது நாள் ஆட்டம்.

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் மும்பை 224 ரன்களும், விதர்பா 105 ரன்களும் எடுத்திருந்தன. 2வது இன்னிங்சில் மும்பை அணி மிரட்டலாக 418 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து விதர்பா அணி, 528 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி தற்போது ஆடிவருகிறது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ரஹானே, 143 பந்துகளில் 73 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 95 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியிருந்தனர். ஆட்டத்தின் உச்சமாக இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் அறிமுகமான சர்ப்ராஸ் கானின் தம்பியான 19 வயதாகும் இளம் வீரர் முஷீர் கான், 326 பந்துகளில் 136 ரன்கள் என சதம் அடித்து நிலையாக நின்று ஆடி அணிக்குப் பலம் சேர்த்தார்.

இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த மும்பை வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார் முஷீர் கான்.

1994 – 95ம் ஆண்டு ரஞ்சி இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் தனது 21 வயதில் சதம் அடித்ததே தற்போது வரை யாரும் தகர்க்க முடியாத சாதனையாக இருந்தது. அந்த இறுதிப் போட்டியில் சச்சின் 140, 139 என இரு சதங்களை விளாசியிருப்பார். இந்நிலையில் 19 வயதாகும் இளம் வீரரான முஷீர் கான், ரஞ்சி இறுதிப் போட்டியில் சதம் அடித்து சச்சினின் 29 ஆண்டுக்கால சாதனையை முறியடித்திருக்கிறார்.

முஷீர் கானின் அபார ஆட்டத்தை சச்சினே நேரில் கண்டுகளித்து அவருக்கு தன் பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். அவருடன் ரோஹித் சர்மாவும் இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்திருந்தார். முஷீர் கான், பரோடாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.