கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தனவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் மாகாணத்தில் முன்னெடுத்துவரும் சமூக பணியின் ஒரு அங்கமாக வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு, வீட்டுத்தோட்ட விவசாய பயனாளிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக குருக்கள் மடம் 11 வது இலங்கை சிங்க ரெஜிமேந்து இராணுவ படை கட்டளை அதிகாரி மேஜர் நிமால் பத்ம ஶ்ரீ ஏற்பாட்டில் சில்வர் மில் அறக்கட்டளை நிதி அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டின் வாழ்கின்ற கர்ப்பிணி தாய் மார்களுக்கான போசாக்கு உலர் உணவு பொதிகளும், தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்ற வீட்டுத் தோட்ட விவசாய குடும்பங்களுக்கு தென்னை மரக் கன்றுகள் மற்றும் வீட்டுத்தோட்ட. விவசாய உள்ளீடுகள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன் போது வழங்கப்பட்டன.
கிழக்குமாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், அம்பாறை 24 வது இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிபுள் சந்திர ஶ்ரீ, மட்டக்களப்பு கல்லடி 243 வது இராணுவ கட்டளை அதிகாரி கேணல் சந்திம குமார சிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், சில்வர் மில் அறக்கட்டளை பிரதி நிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகள், கர்ப்பிணி தாய் மார்கள், வீட்டுத்தோட்ட பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலாச்சார நடனங்களும், இராணுவத்தினரால் சிங்கள மொழி பயிற்சிகளை வழங்கும் மாணவர்களின் நிகழ்வுகளும் அரங்கை அலங்கரித்தமை குறிப்பிடத்தக்கது.