டெல்லி குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்கள் முன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் – ரிஷப் பண்ட்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் உயிர் தப்பினார். காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கிய அவர் முழு உடல்தகுதியை எட்டி விட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக மறுபிரவேசம் செய்கிறார். உடல்தகுதியை எட்டிய பிறகு ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது போன்ற பயங்கர கார் விபத்துக்கு பிறகு அந்த கடினமான கட்டத்தை கடந்து மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்வது அதிசயமாக இருக்கிறது. இந்த தருணத்தில் எனக்கு உதவிகரமாக இருந்த நலம்விரும்பிகள், ரசிகர்கள், கிரிக்கெட் வாரியம் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன். உங்களின் அன்பும், தொடர்ச்சியான ஆதரவும் தான் எனக்கு பலத்தை தருகிறது.

கிரிக்கெட்டில் மறுபடியும் அறிமுக வீரராக இறங்குவதை போல் உணர்கிறேன். இதுவே என்னை உற்சாகப்படுத்துகிறது. அதேநேரத்தில் பதற்றமாகவும் இருக்கிறது.

ஐ.பி.எல். போட்டியை நான் அனுபவித்து விளையாடக்கூடியவன். டெல்லி அணிக்கு மீண்டும் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என ஒவ்வொருவரின் ஆதரவும், வழிகாட்டுதலும், ஒத்துழைப்பும் எனக்கு அனைத்து இடத்திலும் பக்கபலமாக இருந்தன. எனது டெல்லி குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்கள் முன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.