தமிழ் கிரிக்கெட் கமென்ட்ரியில் அசத்திக் கொண்டிருக்கும் வர்ணனையாளர் சூப்பர் முத்துவை ஐ.பி.எல் ஐ முன்னிட்டு நேரில் சந்தித்து உரையாடினோம். அவருடைய தனிப்பட்ட அனுபவங்கள் தொடங்கி பல விஷயங்கள் குறித்தும் சுவாரஸ்யமாக பேசியிருந்தார். அவரது பேட்டி இங்கே…

திருநெல்வேலியை சேர்ந்த நீங்கள் ஊடகத்தில் அறிமுகமாகி இப்போது கிரிக்கெட் வர்ணனையிலும் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறீர்கள். இந்த பயணத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
லயோலா கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் மூன்று ஆண்டுகள் வேலைப் பார்த்தேன். வேலைப்பளுவும் அதிகமாக இருந்தது. ஒரே சுழற்சியில் சிக்கிக்கொண்டதைப் போல அயற்சியாகவும் இருந்தது. அந்த வேலையை விட்டுவிட்டு ஜர்னலிசம் படிக்கச் சென்றேன். முடித்துவிட்டு இண்டர்ன்ஷிப்பாக ஒரு FM இல் வேலைக்குச் சென்றேன். அங்கிருந்துதான் எல்லாம் தொடங்கியது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஆங்கராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தேன். ஒரு யூடியூப் சேனலில் நகைச்சுவை வீடியோக்களும் செய்துகொண்டிருந்தேன். என் நண்பர் ஒருவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு விளையாட்டுகளின் மீது ஆர்வம் உண்டு என்பது அவருக்கு தெரியும். தமிழில் கிரிக்கெட் கமென்ட்ரி என்றவுடன் அவர் என்னை அழைத்தார். நிறைய பேரை ஆடிஷனுக்கு அழைத்திருந்தார்கள். நானும் கலந்துகொண்டு தேர்வாகிவிட்டேன். சில ஆண்டுகளாக இந்தப் பணியை மனநிறைவாகச் செய்துகொண்டிருக்கிறேன்.
தொகுப்பாளராக தொலைக்காட்சிகளில் நீங்கள் செய்த பணி வேறாக இருந்திருக்கும். தீவிரமாக கிரிக்கெட் பேசும் சூழலுக்குள் உங்களை எப்படி தகவமைத்துக் கொண்டீர்கள்?
நாம் வெளியிலிருந்து பிரமிப்பாக பார்க்கும் வீரர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் பேச வேண்டும் எனும் போது கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையாகவே இருந்தது. ஆனால், தொலைக்காட்சியில் இருந்த குழுவினர் அதையெல்லாம் புரிந்துகொண்டு என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வர பல பிரயத்தனங்களை செய்தார்கள்.

பத்ரிநாத், ஹேமங் பதானி, ஸ்ரீகாந்த் போன்ற வீரர்களெல்லாம் ஒரு குழு விளையாட்டை ஆடி இந்த உயரத்தை அடைந்தவர்கள். அவர்களிடம் டீம் ஸ்பிரிட் என்பது இயல்பிலேயே இருக்கிறது. அதனால் அவர்கள் என்னை வெகுவிரைவிலேயே சகஜ நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். நிறைய சினிமா நட்சத்திரங்களுடன் பழகியிருக்கிறேன். அவர்களை விட கிரிக்கெட் வீரர்கள் ரொம்பவே இயல்பானவர்கள்.
ஆர்.ஜே.பாலாஜி, சீக்கா, நீங்கள் என மூவரும் சேர்ந்தால் ரணகளமாக இருக்குமே. இவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
சீக்காவுடன் பணியாற்றும் ஒவ்வொரு நொடியையும் ரசித்திருக்கிறேன். தங்கமானவர். தன்னால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்யக்கூடியவர். கமென்ட்ரியில் என்ன சந்தேகம் என்றாலும் உட்கார வைத்து சொல்லிக்கொடுப்பார். ஆர்.ஜே.பாலாஜி என்னுடைய மெண்ட்டர்.
FM இல் வேலை பார்த்த காலத்திலேயே அவரை எனக்கு தெரியும். அப்போது அவர் பிரபலமான RJ. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்தவன். ஆனாலும் அலுவலகத்தில் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது நான் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிடுவேன். அந்த சூழலிலிருந்தே எனக்கு அறிமுகமாகி என்னை வழிநடத்தி வருகிறார்.

வெளியிடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு போய் ரெக்கார்ட் செய்து வருவதுதான் FM இல் என்னுடைய வேலை. நீ உனக்குன்னு தனியா ஒரு ஷோ கேளு. உன்னால நல்லா பண்ண முடியும்னு அப்பவே ரொம்ப ஊக்குவிப்பாரு. அவரோட வளர்ச்சிய பார்க்க சந்தோஷமா இருக்கு.
ஒரு போட்டிக்கு முன்பாக நீங்கள் எப்படி தயாராவீர்கள். போட்டி நடைபெறும் ஒரு நாளில் உங்களின் வழக்கம் என்னவாக இருக்கும்?
தனிப்பட்ட முறையில் ஒரு போட்டி சார்ந்து சில தரவுகளை நானே எடுத்துக்கொள்வேன். உதாரணத்திற்கு, சென்னையும் பெங்களூருவும் சேப்பாக்கத்தில் மோதும் போட்டியெனில் சேப்பாக்கத்தில் இதற்கு முன் இந்த அணிகள் மோதிய ரெக்கார்டுகளை எடுத்துக் கொள்வேன். இரு அணிகளின் முக்கிய வீரர்களின் செயல்பாடுகள் பற்றி பார்த்து வைத்துக் கொள்வேன். அதுபோக சேனலின் தரப்பிலும் முக்கியமான தரவுகளை கொண்ட ஒரு ஷீட் கொடுப்பார்கள். இரண்டு ஐ.பி.எல் போட்டிகள் உடைய நாள் எனில் மதியம் 12 மணிக்கே ஸ்டூடியோவுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஒரே போட்டி எனில் மாலை 4 மணிக்கு சென்றால் போதும். நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒரு ரன் ஆர்டர் வைத்திருப்பார். அதன்படி வேலைகள் தொடங்கும். ஒவ்வொரு 5 ஓவருக்கும் கமென்ட்ரியில் ஆள் மாறிக்கொள்வோம். இடையில் அங்கேயே ஒரமாக உட்காந்து தேநீர் அருந்திக்கொண்டு மேட்ச் பார்ப்போம். மும்பையில்தான் அலுவலகம் என்பதால் மற்ற மொழிகளுக்கான ஸ்டூடியோவும் அங்கேயேதான் இருக்கும். மற்ற மொழி பேசும் வீரர்கள் ஆங்கர்களும் அங்கேதான் இருப்பார்கள். அவர்களுடன் நட்பாகும் வாய்ப்பு கிடைக்கும். போட்டி முடிந்த பிறகு மறுநாளுக்காக சில நிகழ்ச்சிகளை ரெக்கார்ட் செய்து விட்டு ஏறக்குறைய இரவு 1 மணிக்குதான் ஹோட்டல் ரூமுக்கு வருவோம். இரண்டு மாதங்கள் தொடர்ந்து இதையே செய்ய வேண்டும் என்பதால் ஜெராக்ஸ் மெஷினுக்குள் சிக்கிய பேப்பரை போன்றே தோன்றும். ஆனாலும் மகிழ்ச்சிதான்.
உண்மையைச் சொல்லுங்கள், உங்களுக்கு பிசிசிஐ யிடமிருந்தும் சேப்பாக்கம் தரப்பிலிருந்தும் எத்தனை ஐ.பி.எல் டிக்கெட்டுகள் வரும்?
‘ஹலோ…யாரு முத்துவா சேப்பாக் வந்து டிக்கெட் கலெக்ட் பண்ணிட்டு போங்க ப்ரோன்னு தோனியே கூப்டுவாரு. அட யாருங்க நீங்க… ஒரு டிக்கெட் கூட கொடுக்க மாட்டாங்க. ஆனா, இது தெரியாம ப்ரண்ட்ஸ் பேமிலினு நிறைய பேரு டிக்கெட் கேட்பாங்க. கெஞ்சிக் கூத்தாடி சில சமயங்கள்ல ஒன்னு ரெண்டு டிக்கெட் வாங்கிக் கொடுத்துருக்கேன். மத்தப்படி இந்த டிக்கெட் பஞ்சாயத்தே பெரிய தலைவலிதான். நானே சில சமயங்கள்ல ஆன்லைன் டிக்கெட் புக் பண்ணிருக்கேன். எனக்கு கிடைக்குறப்ப எல்லாருக்கும் கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க. ஆனா, கிடைக்கலன்னா எங்கிட்ட கேட்காதீங்க.’ என கையெடுத்து கும்பிட்டு புன்னகைக்கிறார் முத்து.