பிரபல தெலுங்கு நடிகரான வெங்கடேஷ் டகுபதியின் இரண்டாவது மகள் ஹயவாஹினி – டாக்டர் நிஷாந்த் திருமண விழா ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
கடந்த 15ம் தேதி நடைபெற்ற இவ்விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக தெலுங்கு முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, சிரஞ்சீவி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது. இதையடுத்து பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலக முன்னணி தயாரிப்பாளர் ராமா நாயுடு தெலுங்கில் ஏரளமான திரைப்படங்களைத் தயாரித்தவர். இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் ராமா நாயுடுவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவரது மகன்தான் இன்று பிரபல நடிகராக வலம் வரும் வெங்கடேஷ் டகுபதி. இவர் சென்னையில் தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு குழந்தைகள். மூத்த மகள் ஆஷ்ரிதா திருமணம் 2019ம் ஆண்டு நடந்து முடிந்தது. இதையடுத்து அவரது இரண்டாவது மகள் ஹயவாஹினி மற்றும் டாக்டர் நிஷாந்த் இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஜயவாடாவில் திருமண நிச்சயம் நடந்தது. தற்போது, இவர்களின் திருமணம், ஹைதராபாத்தில் அவர்களின் ராமா நாயுடு ஸ்டுடியோவில் கோலகலமாக நடந்திருக்கிறது.