சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை புதன்கிழமை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். மேலும், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்கும் நிலையில், முதன்முதலாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக, கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது. திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 20) காலை 10 மணிக்கு கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார். மேலும், இத்தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.