கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் கட்டுமான பணியில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஐந்து மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் கார்டன் ரீச் பகுதியில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடத்திற்கு உரிய அனுமதியின்றியும், எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளின்றியும் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அக்கட்டடத்தின் கட்டுமான பணிகளை ஏராளமான தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர். அப்போது திடீரென அக்கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
தகவலறிந்து வந்த மீட்பு படையினர், நேற்று இரவு வரை, இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேரின் உடல்களை மீட்டனர். படுகாயங்களுடன் பலர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும், ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, வீட்டில் கீழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்து நிகழ்ந்த பகுதிக்கு தலையில் கட்டுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement