சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், 1999 முதல் ஐந்து முறை போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 2009, 2019 என இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது ஆறாவது முறையாக போட்டியிடுவதால், நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது இந்த தொகுதி. இந்தியா கூட்டணி சார்பில் வி.சி.க திருமாவளவனும், அ.தி.மு.க சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசனும் களம் காணும் இந்த தொகுதியில், பா.ஜ.க வேட்பாளராக வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
யார் இந்த கார்த்தியாயினி ?
கடந்த 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது, பெங்களூரு தனி நீதிமன்றம். அந்தத் தீர்ப்பு வெளியானபோது, தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளவுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்ட மற்றொருவர் கார்த்தியாயினி.

வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான இவர், அப்போது அடித்த அரசியல் ஸ்டன்ட்டில் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களேகூட சற்று ஆடித்தான் போனார்கள். அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு கூடுதலாக 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. அதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவைக் குளிர வைப்பதற்காக, அ.தி.மு.க. தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டன. அ.தி.மு.க தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் குன்ஹா. அந்தச் சமயத்தில்தான் குன்ஹாவையும், அவரது தீர்ப்பையும் விமர்சித்தும், எதிர்த்தும் மாநகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் இந்த கார்த்தியாயினி.
அத்துடன் குன்ஹாவின் உருவ பொம்பையும் எரிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளால் ஜெயலலிதாவுக்கே தலைசுற்றியிருக்கும் என்பது தனிக் கதை. கார்த்தியாயினியின் இந்தத் தீர்மானம், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என கடும் கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், கர்நாடக நீதிமன்றத்திலும் அவரது பெயரில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, பகிரங்க மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று கார்த்தியாயினி தலையில் குட்டுவைத்தது நீதிமன்றம். பின்னர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார் கார்த்தியாயினி. அ.தி.மு.க-வின் அதிதீவிர விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட கார்த்தியாயினி, ஜெயலலிதா மறைந்த ஒருசில மாதங்களிலேயே, பா.ஜ.க-வில் ஐக்கியமானார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய்தான், கார்த்தியாயினியின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார்சுழி போட்டவர்.

அமைச்சராக இருந்த வி.எஸ்.விஜய், வேலூரில் தனக்கென ஓர் அணியை உருவாக்கக் காய் நகர்த்திக் கொண்டிருந்த நேரம் அது. நகராட்சியாக இருந்து, தரம் உயர்த்தப்பட்ட வேலூர் மாநகராட்சிக்கு 2012-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அப்போதைய அமைச்சர் வி.எஸ்.விஜய், எப்படியாவது மேயர் பதவியை தன் சகாக்களுக்கு வாங்கிக்கொடுத்து, அவர்களைத் தன் கைக்குள் வைத்துக்கொள்ள விரும்பினார். தனக்கு விசுவாசமான ஆளைத் தேடியபோதுதான், விஜய்யிடம் வேலை பார்த்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் அனுஷ்குமாரின் மனைவி கார்த்தியாயினி தேர்வானார். அப்போதுதான் அவருக்குக் கட்சியின் உறுப்பினர் அட்டையே வழங்கப்பட்டது.
வேலூரைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரே பெரும்பான்மையாக வசிப்பதால், எம்.எல்.ஏ அல்லது எம்.பி தேர்தல் என எந்தத் தேர்தலானாலும், அந்த சமூகத்தினரைத்தான் கட்சிகள் வேட்பாளராக நிறுத்தும். `மேயர் தேர்தலில் அப்படி நடந்தால், தனக்கு செல்வாக்கு இருக்காது. தான் நினைத்தது நடக்காது என்பதை உணர்ந்த விஜய், மன்னார்குடி அஸ்திரத்தைப் பயன்படுத்தி, மேயர் பதவியைத் தலித்துகளுக்கானதாக அறிவிக்க வைத்து, கார்த்தியாயினியை வெற்றிபெற வைத்தார். ஆனால், ஆறே மாதத்தில் விஜய்யின் கனவைத் தகர்த்த கார்த்தியாயினி, அவருக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்தார். அதில் விழிபிதுங்கி நின்றார் முன்னாள் அமைச்சர் விஜய். “அமைச்சர் பதவி என்பது ஜெயலலிதாவால் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம். ஆனால், நான் வகிக்கும் மேயர் பதவியை அப்படிச் செய்ய முடியாது.

அதனால் அவரை அனுசரித்துப் போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று சொல்லி வலம்வர ஆரம்பித்தார். நாளடைவில் விஜய்க்கும், இவருக்குமான இடைவெளி அதிகரித்தது. அதேநேரத்தில், ஆற்காடு எம்.எல்.ஏ-வான ஆர்.சீனிவாசனிடம் மட்டும் கார்த்தியாயினி நெருக்கம் காட்டி வந்தார். ஒருகட்டத்தில் கட்சியின் சீனியரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணியையே ஓவர்டேக் செய்து அதிரடி காட்டினார். அடுத்து வந்த எம்.பி தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு காய் நகர்த்தினார். ஆனால், கே.சி.வீரமணியினுடனான மோதல் காரணமாக அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
அதன்பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்தார். ஆனால், கே.சி.வீரமணியைத் தாண்டி எதுவும் செய்ய முடியாமல், அந்த முயற்சியில் தோல்வியடைந்தார். அதன் பிறகுதான் கட்சியில் அவர் டம்மியாக்கப்பட்டார்” என்றார்.
ஜெயலலிதா இறந்த பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழலில் எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் குழம்பியவர், அனைத்து அணிக் கதவுகளையும் தட்டிப் பார்த்தார். ஆனால், எந்தக் கதவும் இவருக்காகத் திறக்கவில்லை. கடைசி அஸ்திரமாக டி.டி.வி. தினகரன் தரப்புக்குத் தூதுவிட, அவர்களும் இவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.
கட்சி மற்றும் அரசு விழாக்களில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதால், விரக்தியில் இருந்தவர் ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசனை அணுகினார். அப்போது, “அ.தி.மு.க-வில் எந்தப் பக்கம் போனாலும் எதுவும் செய்ய முடியாது. அப்படியே போனாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நம்மால் வளர முடியாது. தற்போதைய சூழல் பா.ஜ.க-வுக்குத்தான் சாதகமாக இருக்கின்றது. உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் அல்லது 2019 எம்.பி தேர்தல் ஆனாலும், தேர்தலில் கண்டிப்பாக உனக்கு சீட் வாங்கி விடலாம்” என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகே, முழு நம்பிக்கையோடு டெல்லி சென்று அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பிறகு 2020-ம் ஆண்டு வேலூர் மாநில செயலாளார் பதவியைப் பெற்றவர், தற்போது மாநில பொதுச்செயலாளராக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் தற்போது சிதம்பரம் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் கார்த்தியாயினி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY