ஶ்ரீவில்லிப்புத்தூர்: பாஜக கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் ஸ்டார்ட்-அப் பிரிவு தலைவர் ஆனந்தன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிட முயற்சி செய்த நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி 1998 முதல் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு உள்ளார். கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். கடந்த சில ஆண்டுகளாக பாஜக உடன் இணைந்து செயல்பட்டு வந்த கிருஷ்ணசாமி நீட் தேர்வு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
மேலும், ஆர்எஸ்எஸ் மாநாட்டிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ நடைபயணமாக தென்காசி வந்தபோது, அவருடன் கிருஷ்ணசாமியும் கலந்துகொண்டார்.
2024 தேர்தலிலும் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதமே தென்காசி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை கிருஷ்ணசாமி திறந்து வைத்து, பணிகளை தொடங்கினார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாநில பொறுப்பாளர் ஆனந்தன் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதாக கூறி, சுவர் விளம்பரங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தீவிரமாக பணியாற்றி வந்தார். இதனால் தென்காசி தொகுதியில் 6 முறை போட்டியிட்ட கிருஷ்ணசாமி அதிருப்தி அடைந்தார். இது குறித்து பாஜக தலைமை எவ்வித கருத்தும் தெரிவிக்காதததால், கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் இணைந்தார். இதனால், ஆனந்தன் தென்காசி தொகுதி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக பாஜகவினர் கூறி வந்தனர்.
கடந்த ஒரு வாரமாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தென்காசியில் போட்டியிடுவதாக கூறப்பட்டு வந்தது. இன்று பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் ஜான் பாண்டியன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவது கிருஷ்ணசாமியா, ஆனந்தனா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அமைதியாக காத்திருந்த ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதனிடையே, ‘தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம். ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். அதன் விவரம்: தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில்தான் போட்டி: கிருஷ்ணசாமி உறுதி