மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும் என்றும் கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவிலேயே தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்கான, தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தி.மு.க தனது முதல் தேர்தல் பரப்புரை கூட்டத்தை திருச்சியில் நடத்திவருகிறது.

இந்தக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், கே.என்.நேரு உள்ளிட்ட தி.மு.க அமைச்சர்கள், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உட்பட இருகட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அதையடுத்து, திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “பாசிச பா.ஜ.க-வை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் ஆட்சியை ஒன்றியத்தில் ஏற்படுத்துவதற்கான தேர்தல் இது.
தேர்தல் என்பதால்தான் பிரதமர் தற்போது இந்தியாவிலேயே இருக்கிறார், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகிறார். இல்லையென்றால் பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார். தமிழ்நாட்டில் தனக்கு செல்வாக்கு அதிகரித்துவிட்டதால் தி.மு.க-வினருக்கு தூக்கம் இல்லை என மோடி சேலத்தில் பேசியிருக்கிறார். உண்மையில் தன்னுடைய ஆட்சி முடியப் போகிறதே என மோடிக்கு தான் தூக்கம் இல்லை. அவரின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது.

மாநில உரிமைகளைப் பறிக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதை மறைக்கவும், உண்மையான மக்கள் பிரச்னைகளை மறைக்கவும் தேவையில்லாதவற்றைப் பேசி திசைதிருப்புகிறார். தேர்தலுக்குத் தேர்தல் நீங்கள் நடத்தும் கபட நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இனி நம்ப மாட்டார்கள், உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
இந்த 10 ஆண்டுகளில் அவர்கள் செய்த ஊழல்களில் இமாலய எடுத்துக்காட்டு `தேர்தல் பத்திரம்’ ஊழல். கடந்த ஐந்தாண்டுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய மத்திய அரசின் ஏஜென்சிகளை தங்களின் கைப்பாவையாக பா.ஜ.க பயன்படுத்தியிருக்கிறது. தேர்தல் பத்திரம் மூலம் ரூ.8,000 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். ஏழு லட்சம் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதுபற்றி ஒன்றிய அரசு வாய் திறக்கவே இல்லை. தேர்தல் பத்திரம் போலவே பிஎம் கேர்ஸ் ஃபண்ட் மூலம் நிதி வசூலித்திருக்கிறார்கள்.

ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அதைப் பற்றிய அத்தனை ரகசியங்களும் அம்பலமாகும். ரஃபேல் ஊழலின் ரகசியமும் வெளிவரும். தங்களின் ஊழலை மறைப்பதற்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை நேற்று கைதுசெய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்களின் தோல்வி பயம்தான் காரணம். அச்சத்தில் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பா.ஜ.க.
தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆனால், இங்கு வருவதற்கு முன் அமைச்சர் பொன்முடியின் பதவி பிரமாணத்தை முடித்துவிட்டு, ராஜ்பவனிலிருந்து தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாகத் தொடங்குகிறேன் என்று ஆளுநரிடம் கூறிவிட்டு வந்திருக்கிறேன். அவரும் `பெஸ்ட் ஆஃப் லக்’ என்று கூறினார். ராஜ்பவனில் தொடங்கிய இந்த பயணம் குடியரசுத் தலைவர் மாளிகை வரை செல்லும். இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க-வுக்குமான யுத்தம் அல்ல இது, இந்திய நாட்டு மக்களுக்கும் பாசிச பா.ஜ.க-வுக்குமான யுத்தம். பாசிச பா.ஜ.க வேரோடு வீழ்த்தப்படும்.

பிரதமரே, தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு. தமிழ்நாட்டுக்கு விரோதமாக அனைத்தையும் செய்துவிட்டு, தமிழ் தான் உலகின் மூத்த மொழி என்ற நீலிக்கண்ணீர் வடிக்கிறார். நீங்கள் வளர்க்கின்ற வெறுப்புத் தீயில், ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பெங்களூருவில் வெடித்த குண்டு தமிழர்கள் வைத்த குண்டு என்று கூறுகிறார். தமிழர்கள் என்ன பயங்கரவாதிகளா…
மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவமாகக் கூறுகிறார்… உங்களின் அரசியலுக்காகத் தமிழ்நாட்டு மக்களை நீங்கள் கொச்சைப்படுத்துவீர்களா… கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்கிறீர்களே தொழிலதிபர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறுவீர்களா… மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதியமைச்சர் பதவி. பா.ஜ.க-வில் இருக்கும் அனைவருக்கும் சொல்கிறேன், உங்களின் ஆணவம்தான் பா.ஜ.க-வை வீழ்த்தப் போகிறது.

இப்படிப்பட்ட எதேச்சதிகார அதிகார பா.ஜ.க-வை இங்கிருக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கிறாரா… சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது சிறுபான்மையினர் நலன் பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க செய்த துரோகங்களுக்குத் துணை நின்று லாலி பாடிய எடப்பாடி பழனிசாமி, அதே பா.ஜ.க-வுடன் கள்ளக் கூட்டணி நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகம் விரைவில் முடிவுக்கு வரும். பாசிச பா.ஜ.க-வின் எண்ணங்களுக்கு முடிவு எழுதப்படும்” என்று கூறினார்.