வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி திருமண அழைப்பிதழ் வடிவில் விழிப்புணர்வு பிரசுரங்கள் @ தருமபுரி 

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில், திருமண அழைப்பிதழ் வடிவில் அச்சிடப்பட்ட பிரசுரங்களை வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மக்களவை தேர்தலில் வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தருமபுரி மக்களவை தொகுதியிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று (மார்ச் 23) பென்னாகரத்தில், திருமண அழைப்பிதழ் வடிவில் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு பிரசுரங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டது. மணமகன்-பேலட் யூனிட். மணமகள்-கன்ட்ரோல் யூனிட். புரோகிதர்-விவி பேட் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய திருமண அழைப்பிதழ் வடிவிலான இந்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வாக்காளர்களின் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறும்போது, “வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த மேற்கொள்ளப்பட்ட இந்த நூதன முயற்சி வாக்காளர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரசுரத்துடன் வெற்றிலைப், பாக்கு வைத்து வழங்குவதால் அதிலுள்ள தகவல்கள் வாக்காளர்களின் கவனம் ஈர்க்கிறது. எனவே, இதுபோன்ற விழிப்புணர்வு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் வழிகாட்டுதல்படி மாவட்டம் முழுக்க வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பூங்கோதை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நர்மதா, டிஎஸ்பி மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.