டெல்லி மெட்ரோவில் இரண்டு பெண்கள் நெருக்கமாக ஹோலி வண்ணம் பூசிக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. பின்னணியில் இந்தி பாடல் ஒன்றும் ஒலிக்கும் இந்த வீடியோவில், மெட்ரோ ரயிலுக்குள் கீழே அமர்ந்துகொண்டு, பாடலுக்கேற்றவாறு அசைந்துகொண்டு ஒருவருக்கொருவர் நெருக்கமாக கன்னத்தில் வண்ணம் பூசிக்கொள்கின்றனர்.

இத்தனைக்கும், பயணிகளும் ரயிலுக்குள் இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) இது குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், `முதலில், இந்த வீடியோவை மெட்ரோவுக்குள் படமாக்கியதன் நம்பகத்தன்மையும் சந்தேகத்திற்குரியது. ஏனெனில், இந்த வீடியோ எடுப்பதற்கு, Deep Fake தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ரீல்ஸ் எடுப்பது போன்ற சக பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இது போன்று எடுக்கப்படும்போது, சக பயணிகள் உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த வீடியோவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதில் ஒருவர், `இந்த வீடியோவைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன். வீடியோவில், பின்னாலிருப்பவர்களை நினைத்துப் பாருங்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார்.