''தேர்தல் பிரச்சாரத்தை சிபிஐ தடுக்கிறது'' – தேர்தல் ஆணையத்துக்கு மஹுவா மொய்த்ரா கடிதம்

கொல்கத்தா: சிபிஐ தன்னை துன்புறுத்துவதாகவும், தனது தேர்தல் பிரச்சாரத்தை முடக்குவதாகவும் குற்றம்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ரா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக டிஎம்சி முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சனிக்கிழமை சோதனை நடத்தியது. இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை )தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மொய்த்ரா, “நான் தேர்தலில் போட்டியிடுவது தெரிந்தும், வேண்டுமென்றே சிபிஐ நான்கு முறை சோதனை நடத்தும் முடிவினை எடுத்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், “எனது பிரச்சாரங்களை தடுக்கும் ஒரே நோக்கத்துடனும், இந்த தேர்தல் நேரத்தில் என் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. விசாரணை அமைப்பு சட்டவிரோதமாக சோதனை நடத்திய இடங்களில் எனது தேர்தல் பிரச்சார அலுவலகமும், எனது எம்.பி. அலுவலகமும் அடங்கும்.

சிபிஐ-யின் நடவடிக்கை எனது தேர்தல் பிரச்சார முயற்சிகளை முடக்கி, என்னை துன்புறுத்தும் என்பதை சிபிஐ சந்தேத்திற்கிடமின்றி அறிந்திருந்தது. விசாரணை அமைப்பு ஏற்படுத்தியிருக்கும் இந்த அவதூறு பிரச்சாரம், எனது அரசியல் எதிரிகளுக்கு ஆதாயமாகியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. சிபிஐ சோதனை செய்ய தேர்ந்தெடுக்கும் நேரமும், அதன் வழிமுறைகளும், மிகக் குறுகிய நேரமும் அவர்களை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது, மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

லோக்பால் பிரிவு 20(3)(ஏ)-ன் கீழ் இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

மொத்ரா மீதான குற்றச்சாட்டு: மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.-யாக இருந்த மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் மக்களவையில் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணையை அடுத்து மஹுவா மொய்த்ரா கடந்த டிசம்பரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.