விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருப்புக்கோட்டையில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது. அ.தி.மு.க., ஆட்சியில் நமது மாநில உரிமைகள் அத்தனையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்துவிட்டனர். எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் புதிய கல்விக்கொள்கை திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதன்மூலமாக 5, 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கும் பொது தேர்வை திணித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ஜி.எஸ்.டி வரியாக ரூ.6.50 லட்சம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு நமக்கு இதுவரை 1.50 லட்சம் கோடி மட்டும் பங்கீட்டு நிதியாக ஒதுக்கியுள்ளனர். ஒரு ரூபாய் வரி கட்டினால் தமிழகத்திற்கு வெறும் 28 பைசாதான் திருப்பித் தருகின்றனர். பிரதமர் மோடி தேர்தலுக்காக மட்டும்தான் தமிழகம் வருவார். ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் வெள்ளம் ஏற்பட்டபோது, தமிழக அரசு பேரிடர் நிவாரணமாக 37 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டது. அதற்கு நாங்கள் என்ன ஏ.டி.எம். மிஷினா? என மத்திய அமைச்சரவை கேட்கிறது. நியாயமாக தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதியை கேட்டால்கூட இந்த மத்திய அரசு தர மறுக்கிறது.

மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த வரைக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழையவிடவில்லை. அதுபோல நாங்களும் நீட் தேர்வை விரட்டியடிப்போம். சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், மகளிர் உரிமை தொகை என சொன்னதை செய்து காட்டினோம். மகளிர் உரிமைத் தொகை கிட்டத்தட்ட 1கோடி 60 லட்சம் பேருக்கும் மேல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பலன்பெறாத மற்ற பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைப்பதற்கான வழிசெய்வோம். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது. ஆகவே மத்தியில இருக்கிற ஆட்சியை அகற்ற வேண்டும்” என்றார்.