பாஜக கூட்டணியில் ஜிகே வாசன் சேர்ந்ததற்கு எதிர்ப்பு! தமாகா-வில் விழுந்த அடுத்த விக்கெட்

Tamil Maanila Congress, GK Vasan: தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த கதிர்வேல் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜிகே வாசனுக்கு தன்னுடைய விலகல் கடிதத்தை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த கதிர்வேல், ” ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சுமார் 50-ஆண்டுகளாக பயணித்து பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய பின்பு ஜிகே வாசனுடன் அரசியலில் பயணித்து வந்தேன். நான் INTUC தொழிற்சங்கங்களுக்கு தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக இருந்து வருகின்றேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினை பொறுத்தவரை-யில் தோற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.” என விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலங்களில் மத்திய அமைச்சர் பதவி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு துரோகம், மேல் சபை எம்பி பதவி கொடுத்த அதிமுகவுக்கு துரோகம் என அவரை உயர்த்தி பதவி கொடுத்த கட்சிகளுக்கு துரோகம் செய்தவர் ஜிகே வாசன். இப்போது பாரதிய ஜனதா கட்சியிடம் கூட்டணி வைத்துள்ளார். இங்கு சீட் வாங்கி அதனை அதிக விலைக்கு விற்று வருகின்றார். கடந்த 2016-ம் ஆண்டு  மக்கள் நல கூட்டணி-யில் பயணித்தபோது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நின்றேன். அப்போது அந்த கூட்டணியில் அதிக வாக்குகள் பெற்றது நான் தான். சுமார் 20-ஆயிரம் வாக்குகள் அந்த தொகுதியில் வாங்கினேன்.

அதனடிப்படையில் தற்போது  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை என்னைவிட கூடுதலாக கேட்டவருக்கு சீட்டை விற்றுவிட்டார். இதனால் நான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். விலகிதற்கான காரணங்கள் குறித்து தபால் மூலம் தலைமைக்கு தெரியபடுத்தியது மட்டுமன்றி  தொலைபேசி மூலமாகவும் ஜிகே வாசனிடம் கட்சியில் பயணிக்க விருப்பம் இல்லை விலகி கொள்கின்றேன் என கூறிவிட்டேன் என்று கதிர்வேல் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனை பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்றும்  கதிர்வேல் குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.