டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. அடுத்தநாள், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிக்கை வைத்தது. இருப்பினும், 6 நாள்கள் மட்டும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதன்படி, தற்போது அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கெஜ்ரிவால், கோடை தொடங்கிவிட்டதால் டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க, சிறையிலிருந்து தனது முதல் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவில், தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் போதுமான அளவிலான தண்ணீர் டேங்கர்களை அனுப்புமாறு தெரிவித்திருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக தலைமைச் செயலாளர் உட்பட பிற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும், தேவைப்பட்டால் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவின் உதவியை நாடுமாறும் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இது குறித்து பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, “முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்துகொண்டு, நீர்வளத்துறை அமைச்சராகிய எனக்கு, தனது முதல் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். கைதுசெய்யப்பட்ட பிறகு, இப்படியான இக்கட்டான சூழலிலும் எப்படி இவ்வாறு டெல்லி மக்களைப் பற்றிச் சிந்திக்க முடியும்…

உண்மையில் இது என் கண்களில் கண்ணீர் வரவைக்கிறது. கெஜ்ரிவால் தன்னை டெல்லி முதல்வராக மட்டும் நினைக்காமல், டெல்லியின் இரண்டு கோடி மக்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாக நினைக்கிறார். ஒரு குடும்பத் தலைவர் எப்படி தன் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்கிறாரோ, அதுபோலவே கடந்த ஒன்பது ஆண்டுகளாக டெல்லியை அவர் நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.