தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருபவர் டாப்ஸி பன்னு. இவர் நீண்ட காலமாக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போயே என்பவரைக் காதலித்து வருகிறார். இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டனர். 2013ம் ஆண்டு முதல் காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகச் செய்திகளும் வெளியாகி இருந்தன. அதன்படி இருவரும் ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் டாப்சி பன்னு திடீரென தன் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து உதய்ப்பூரில் தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் கடந்த 20ம் தேதி தொடங்கியது எனவும், இருவரும் 23ம் தேதி திருமணம் செய்து கொண்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் இப்போது கணவன் மனைவி என்றும், விரைவில் தங்களது திருமணத்தை வெளியுலகிற்கு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்றும் டாப்ஸிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாப்ஸியின் திருமணத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப், கனிகா தில்லன் உட்பட நெருங்கிய பாலிவுட் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகை கனிகா தில்லன் திருமணம் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டிருந்தார். ஆனால் அது யாரது திருமணம் என்று அவர் குறிப்பிடவில்லை. அப்புகைப்படம் டாப்ஸியின் திருமணத்தில் எடுக்கப்பட்டதுதான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

டாப்ஸி திருமணம் செய்து கொண்டுள்ள மத்தியாஸ் பேட்மிண்டனில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டுதான் அவர் பேட்மிண்டன் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது அவர் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடிகை டாப்ஸியின் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
வாழ்த்துகள் டாப்ஸி!