வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணி 4 ஆயிரம் இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் பிறகு அதிலிருந்து விலகி மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) திரும்பியுள்ளார்.
இந்நிலையில் பிஹாரின் நவாடா மாவட்டத்தில் என்டிஏ சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “மக்களவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 4 லட்சம் இடங்களில்…” என்று கூறி தடுமாறிய நிலையில், பிறகு திருத்திக் கொண்டு “4 ஆயிரம் வெற்றி பெறும்” என்று கூறிக்கொண்டே பிரதமர் மோடியை பார்த்தார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதில் நிதிஷ் குமாரை பலர் கிண்டல் செய்து வருகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் சரிகா பாஸ்வான் தனது எக்ஸ் வலைதளத்தில் “பிரதமருக்கு 4 லட்சம் எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவிக்க முதல்வர் விரும்பினார். பிறகு அது அதிகமாக இருக்கும் என்றும் 4,000 போதுமானதாக இருக்கும் என்றும் அவர் நினைத்திருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.