சென்னை: அப்பாவைக் கொலைசெய்த மகன் கைது – பத்து நாள்கள் மர்மம் விலகியது எப்படி?!

சென்னை குன்றத்தூர், பூந்தண்டலம், சக்தி நகரைச் சேர்ந்தவர் தங்கதுரை (70). இவர் நந்தம்பாக்கம் ஸ்ரீபெரும்புதூர் மெயின் ரோட்டில் நர்சரி கார்டன் நடத்தி வந்தார். கடந்த 30-ம் தேதி நர்சரி கார்டனில் தலையில் பலத்த காயங்களுடன் தங்கதுரை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தங்கதுரையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை வழக்கு பதிவுசெய்த குன்றத்தூர் போலீஸார், விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த வழக்கில் எந்தவித துப்பும் கடந்த சில நாள்களாக கிடைக்கவில்லை.

நர்சரி கார்டன்

இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார் ஆலோசனையில் உதவி கமிஷனர் வெங்கட்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் நர்சரி கார்டனிலிருந்து ஒரு பைக் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பைக்கை ஓட்டியவர் யாரென்று தெரியவில்லை. மேலும் பைக்கின் பதிவு நம்பரும் சரியாக தெரியாததால் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

அதனால் குன்றத்தூர் தனிப்படை போலீஸார், தங்கதுரையின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது தங்கதுரை குறித்து முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது. அதை வைத்து போலீஸார் விசாரித்ததில் இந்தக் கொலையைச் செய்தது தங்கதுரையின் மகன் ராபின் என்கிற ராபின்சன் (43) என்பதை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. விசாரணைக்குப் பிறகு ராபினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் கைதான ராபின்சன்

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், “கொலைசெய்யப்பட்ட தங்கதுரைக்கு டென்னீஸ் ராஜ், ராபின், ஆனந்த் என மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் டென்னீஸ் ராஜ் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவரின் மனைவி கீதா போரூரில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தங்கதுரை, தனக்குச் சொந்தமான இடங்களை மூன்று மகன்களுக்கும் பாகம் பிரித்துக் கொடுக்க முடிவு செய்திருந்தார். அதில் மூத்த மகன் டென்னீஸ் ராஜ் உயிரிழந்து விட்டதால், அவரின் மூத்த மகனான சாருனுக்கு ஒரு கிரவுண்ட் இடத்தை கொடுக்க தங்கதுரை முடிவு செய்திருந்தார். ஆனால் திடீரென மனமாறிய தங்கதுரை அந்த இடத்தை விற்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த தங்கதுரையின் இரண்டாவது மகன் ராபின்சன், கடந்த 30-ம் தேதி அதாவது ஈஸ்டர் பண்டிகையன்று நர்சரி கார்டனுக்கு சென்றிருக்கிறார். அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த தங்கதுரையிடம் அண்ணன் மகனுக்கு ஏன் இடத்தை கொடுக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது நடந்த தகராறில் ஆத்திரமடைந்த ராபின்சன், தந்தை என்றுகூட பாராமல் அவரின் தலையில் இரும்பு ராடால் அடித்திருக்கிறார். அதன் பிறகு எதுவுமே நடக்காததுபோல ஈஸ்டர் பண்டிகையையொட்டி சர்ச்சுக்கும் ராபின்சன் சென்றுவிட்டார். தங்கதுரை கொலை குறித்து ராபின்சனிடம் விசாரித்தபோதுகூட எதுவுமே தெரியாது என்று நடித்தார். ஆனால் ராபின்சனின் நடவடிக்கையால் எங்களிடம் சிக்கிக் கொண்டார். கைதுசெய்யப்பட்ட ராபின்சன் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.