மாலே: இந்தியாவிடமிருந்து மாலத்தீவு ஆண்டுக்கு 780 மில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்கிறது. இதுவரையில், இதற்கான தொகையை மாலத்தீவு டாலரில் வழங்கி வந்தது.
இந்நிலையில், இனி இந்தியாவுடனான வர்த்தக பரிவர்த்தனையை மாலத்தீவின் நாணயமான ரூபியாவில் மேற்கொள்வது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகம்மது சயித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மாலத்தீவில் வரும் 21-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இரண்டு ஆண்டுகளுக்குள் டாலர் மதிப்பு உள்நாட்டு சந்தையின் மதிப்புக்கு ஏற்ற அளவில் குறைக்கப்படும்.
டாலருக்குப் பதிலாக, உள்நாட்டு நாணயத்தின் மூலம் வர்த்தகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, அந்நிய செலாவணி கையிருப்பை சேமிக்க முடியும். இதற்காக, பல்வேறு நாடுகளுடன் டாலர் அல்லாத பரிவர்த்தனையை மேற்கொள்வது குறித்து பேசிவருகிறோம். இந்தியாவிடம் இருந்து ஆண்டுக்கு 780 மில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்கிறோம்’’ என்றார்