கேரளாவைச் சேர்ந்த பிபி (மிதுன் ஜெய் ஷங்கர்), அஜு (பிரனவ் ராஜ்), சாந்தன் (ரோஷன் ஷேனவாஸ்) ஆகியோர் பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்கள்.
அங்கே குட்டி (மிதுட்டி) தலைமையிலான சீனியர்களுடன் சண்டை வரவே, அவர்கள் இம்மூவரையும் தாக்குகிறார்கள், ரேக்கிங் செய்கிறார்கள். குட்டி கேங்கை பழிவாங்க, உள்ளூர் தாதாவும் மலையாளியுமான ரங்காவுடன் (பகத் பாசில்) மூன்று மாணவர்களும் பழகுகிறார்கள். இந்த உள்நோக்கம் அறியாத ரங்கா மூவர் மீதும் அன்பு வைக்கிறார். ரங்கா எப்படிப்பட்ட தாதா, இந்த நட்பானது மாணவர்களின் வாழ்க்கையிலும், ரங்காவின் வாழ்க்கையிலும் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது போன்ற கேள்விகளுக்கான பதிலை மியூஸிக்கல் கேங்ஸ்டர் டிராமாவாகச் சொல்கிறது ஜிது மாதவனின் ‘ஆவேஷம்’ என்ற மலையாளத் திரைப்படம்.

உடம்பு முழுவதும் நகைகளுடன் ஒரு ஜாலியான தாதாவாக அட்டகாசம் செய்திருக்கிறார் பகத் பாசில். திரைக்கதை செய்ய வேண்டிய அக்கதாபாத்திரத்தின் விவரிப்புகளைத் தனியாளாகச் சின்ன சின்ன உடல்மொழிகளின் மூலமாக இவரே கொண்டுவந்திருக்கிறார். இக்கதாபாத்திரத்திற்குத் தேவையான ஓவர் ஆக்டிங்கான நடிப்பைத் திகட்டலின்றி செய்திருக்கிறார். அதேநேரம் சில காட்சிகளில் ‘மோனோ ஆக்டிங்’ போல், தனியாக அவர் மட்டுமே நடித்துக்கொண்டிருப்பது ஒருவித அயற்சியைத் தருகிறது. மிதுன் ஜெய் ஷங்கர், பிரனவ் ராஜ், ரோஷன் ஷேனவாஸ் ஆகிய மூன்று புதுமுகங்களும் குறைவில்லாத நடிப்பு. பகத் பாசிலின் ஒன்மேன் ஷோவிற்கு இடையிலும் இவர்களின் பங்களிப்பு தனியாகத் தெரிகின்றது.
ரங்கனின் அடியாளாக சஜின் கோபு, கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்கோடு’ தேவையான கலகலப்பை வழங்கியிருக்கிறார். ஆக்ஷன், காமெடி, சென்ட்டிமென்ட் எனக் கிடைக்கும் காட்சிகளில் எல்லாம் நம்மை ரசிக்க வைக்கிறார். குட்டியாக மிதுட்டி தன் மேனரிஸத்தால் கவனிக்க வைக்கிறார். மன்சூர் அலிகான், ஆஷிஸ் வித்யார்த்தி ஆகியோரும் கொடுத்த பணியைச் செய்திருக்கிறார்கள்.

கல்லூரி மாணவர்களின் அலப்பறைகள், மூன்று நண்பர்களின் ஹாஸ்டல் வாழ்க்கை, கல்லூரி சண்டை…. என இழுத்து, அதேநேரம் சுவாரஸ்யத்துடனும் நகரும் முதற்பாதி, ரங்காவின் வருகைக்குப் பின் புதிய அவதாரம் எடுக்கிறது. ஒரு ரகளையான ரவுடியை ஒரு பக்கம் மாஸாகவும், இன்னொரு பக்கம் காமெடியாகவும் காட்டுவது, அவரின் பின்கதையை வெவ்வேறு “கதைகளின்” வழி விளக்குவது போன்றவை ரசிக்க வைக்கின்றன. பகத்தும் அவரது குழுவும் தங்கள் பங்கிற்கு ரகளை செய்கின்றனர். முக்கியமாக, பகத்திற்கும், அவரது உதவியாளர் அம்பானுக்கும் இடையிலான உரையாடல்கள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.
ஆனால், காமெடியான மற்றும் மாஸான காட்சிகளின் தொகுப்பாகத் திரைக்கதை மாறுவதால், இடைவேளைக்கு முன்பான திரைக்கதையில் சுவாரஸ்யமும் வேகமும் காணாமல் போகின்றன. மேலும், அழுத்தமான கதையும், அதற்கேற்ற காட்சிகளும் இல்லாமல் கொஞ்சம் டல்லடிக்கவும் தொடங்குகிறது. இடைவேளைக்கு முன் வரும் ஹோலி பண்டிகை சண்டைக்காட்சி மட்டுமே இந்தக் குறையைச் சரி செய்து, காமெடி, ஆக்ஷன் என அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இரண்டாம் பாதி திரைக்கதை எதை நோக்கி நகர்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. ஒரு வலுவான ஹீரோவாக ரங்காவை ஒருபக்கம் கட்டமைக்க முயன்றாலும், இறுதி வரை அவரைப் பற்றிய முழு பிம்பம் நமக்குக் காட்டப்படவில்லை. அல்லது அதுவரை காட்டப்பட்ட ரங்கனையாவது அழுத்தமாகக் காட்டியிருக்கலாம். பகத் பாசிஸ் மட்டுமே தனியாக நின்று, அடித்து, அழுது, நடந்து, ஓடி, தவ்வி தன் கதாபாத்திரத்தைத் திரையில் வரைந்துகொண்டிருக்கிறார்.
அந்த இளைஞர்கள் மேல் அவர் பாசம் வைப்பதற்கான காரணத்தையேனும் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். மேம்போக்கான காட்சிகளும், உணர்வுகளும் கூட பகத் பாசிலால் மட்டுமே பார்வையாளர்களுக்குப் பதிய வைக்கப்படுகின்றன. அவரும் தன் பங்கிற்கு அட்டகாசம் செய்திருக்கிறார் என்றாலும், பிடிப்பில்லாமல் ஓடும் திரைக்கதையை பகத் பாசிலின் இருப்பு ஓரளவிற்குத்தான் காப்பாற்றுகிறது. மேலும், அவருக்கு நிகரான வில்லன் கதாபாத்திரமாக மன்சூர் அலிகான் கட்டமைக்கப்படவில்லை என்பதால், இவர்களுக்கு இடையிலான மோதல் அத்தனை சுவாரஸ்யமானதாக மாறவில்லை.

‘Dumb Charades’ விளையாட்டு, ரங்கனின் உண்மை முகத்தை மூன்று நண்பர்கள் அறியும் இடம், கே.ஜி.எஃப் பாடலை பயன்படுத்திய விதம் என சில ஐடியாக்களும், காட்சிகளும் இரண்டாம் பாதிக்குக் கைகொடுத்திருக்கின்றன. க்ளைமாக்ஸை முன்பே நாம் யூகிக்க முடிந்தாலும், இறுதிக்காட்சி தொகுப்பில் பரபரப்பையும், சுவாரஸ்யத்தையும் பகத்தின் நடிப்பும், தொழில்நுட்ப குழுவும் கொண்டுவந்திருக்கின்றன. கல்லூரியில் எங்குப் பார்த்தாலும் சண்டை, ஊரில் எங்குப் பார்த்தாலும் குடி, துப்பாக்கி மோதல் என நடக்கும் இந்த பெங்களூரு, எந்த காவல்துறையின் கண்ணிலும் படவில்லையா என்ற கேள்வியும் எட்டிப் பார்க்கிறது.
பிரத்யேகமாகவும் கவர்ச்சிகரமாகவும் உள்ள டான் உலகம், பெரும்பாலும் இரவில் நடக்கும் காட்சிகள் என சமீர் தாஹிரின் ஒளிப்பதிவிற்கு நல்ல தீனி. அதற்கு தன் முழு பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கொஞ்சம் வித்தியாசமான ப்ரேம்களாலும், ஷாட்களாலும் சண்டைக்காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு ரங்காவின் வருகைக்குப் பின்னான படத்தின் ‘மூட்’-ஐ செட் செய்யப் பெரும் உதவி செய்திருக்கிறது. அதேநேரம், இரண்டாம் பாதியை இன்னும் செறிவாய் தொகுத்திருக்கலாம்.

சுஷின் ஷ்யாமின் இசையில் பாடல்கள் படத்தோடு வந்து, படத்திற்கான ‘வைப்பை’ கடத்துகின்றன. சில இடங்களில் ஸ்பீட் ப்ரேக்காகவும் மாறியிருக்கின்றன. பின்னணி இசையால்தான் இன்னொரு ரங்கன் என நிரூபித்திருக்கிறார் சுஷின் ஷ்யாம். சில காட்சிகளில் பின்னணி இசையே ரங்காவின் கதாபாத்திரத்தின் ஆழத்தை நமக்கு விளக்குகிறது. கொண்டாட்டமான மனநிலையைச் செட் செய்யவும் அது உதவியிருக்கிறது.
கலை இயக்கம், சண்டை வடிவமைப்பு ஆகியவற்றோடு, மற்ற தொழில்நுட்ப குழுக்களும் தங்களின் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கின்றன. மூன்று இளைஞர்களின் ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ படமாக ஆரம்பித்து, பகத் பாசிலின் வருகைக்குப் பின் கேங்ஸ்டர் படமாக அவதரிக்கிறது படம்.

ஆனால், அதற்கு ஆழமான திரைக்கதையையும், அழுத்தமான காட்சிகளையும் நம்பாமல், பகத் பாசில் என்ற ஒற்றை நடிகரையும் தொழில்நுட்ப குழுவையும் மட்டுமே நம்பி களமிறங்கி, ‘தியேட்டர் மெட்டீரியலாக’ மட்டுமே மிஞ்சி நிற்கிறது இந்த ‘ஆவேஷம்’.