பாட்னா: “மீன், குதிரை, யானை, என எதை வேண்டுமானாலும் தேஜஸ்வி யாதவ் சாப்பிடட்டும். அந்த காட்சிகளை ஏன் அவர் குறிப்பாக நவராத்திரியின் போது வீடியோவாக வெளியிட வேண்டும்’’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
நவராத்திரி விழாவின்போது தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டார். இது, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இந்த நிலையில், தேசிய கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிஹாரின் ஜமுயில் நடைபெற்ற கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நவராத்திரி விழாவின்போது மீன், புறா, பன்றி, யானை, குதிரை என எதை வேண்டுமானாலும் சாப்பிடுகிறீர்கள். பின்னர் அதை ஏன் வீடியோவாக வெளியிடுகிறீர்கள். இதிலிருந்து யாரை திருப்திபடுத்த நினைக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நினைப்பில் நீங்கள் அவ்வாறு செய்கிறீர்கள். இது போன்றவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
ஜாமீனில் இருப்பவர்களும், சிறையில் இருப்பவர்களும் கூட்டு சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சிறைக்கு அனுப்புவோம் என்கிறார்கள். நிறைவேற்ற சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வாரி வழங்குவதே அவர்களின் வாடிக்கை. பிரதமர் மோடியை இதுபோன்று விமர்சிப்பதை பிஹார் மக்கள் யாரும் விரும்பமாட்டார்கள்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோயில் கட்டியது உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றிக் காட்டியுள்ளார். இந்தியாவில் மீண்டும் ராமராஜ்யம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் போகிறார்என்று உலகம் நாடுகள் முடிவு செய்துவிட்டன. அதனால்தான், அடுத்த ஆண்டு நடைபெற உள்ளநிகழ்வுகளுக்கு பிரதமரை இப்போதே அழைக்கத் தொடங்கிவிட்டன. இந்த தேர்தல் என்பது ஒரு சம்பிரதாயமான நடவடிக்கைதான். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.