Doctor Vikatan: என் வயது 34. எனக்கு அடிக்கடி தொடைகளில் வலி ஏற்படுகிறது. தொடை வலி என்பது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. அது உண்மையா…. இந்த வலிக்கு என்ன காரணமாக இருக்கும்…. எப்படி மீள்வது?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

உங்கள் தோழி சொன்னதுபோல சிறுநீரகத்திற்கும் தொடை வலிக்கும் பெரும்பாலும் தொடர்பு இல்லை. சிறுநீரகம்,நமது நெஞ்சாங்கூட்டின் கீழே, முதுகுத்தண்டுவடத்திற்கு அருகில் இருபுறமும் உள்ளது. சிறுநீர்க் குழாயோ அங்கு தொடங்கி இடுப்பு எலும்புக்கூட்டினுள் உள்ள சிறுநீர்ப்பை வரை நீளும். எனவே, சிறுநீரகக் கல், சிறுநீரகம் தொடர்பான பிற வலிகள் என்பவை பின் இடுப்பில் தொடங்கி பிறப்புறுப்பு வரை பரவலாம்.
தொடைப்பகுதி நம் உடலின் மிக மிக உறுதியான எலும்பு மற்றும் தசைகளால் ஆனது. இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்க மனிதர்களுக்கு பிட்டம் மற்றும் தொடைகள் வலுவாக இருப்பது அவசியமாகிறது.
தொடைவலிக்கான பொதுவான காரணங்கள் என்று பார்த்தால் , படிகளில் ஏறி இறங்குதல், வெகு தூரம் நடத்தல், நிறைய நேரம் முழங்கால் இடுதல், குத்துக்கால் வைத்து அமருதல் போன்றவையே. பொதுவான காரணங்களில் தசைப்பிடிப்பு அல்லது சுளுக்கு ஆகியவையும் அடங்கும்.

வெயில் காலத்தில் உடலில் உப்புச்சத்து, நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் கிராம்ப்ஸ் (cramps) எனும் தசை இறுக்கம் கெண்டைக்காலில் ஏற்படலாம். வெகு அரிதாக சிலருக்கு இது தொடைவலியாக வரலாம். மேலும், பின் தொடைகளில் ஏற்படும் வலி, தண்டுவட வட்டு அழுத்தத்தால் ஏற்படும் ‘சியாட்டிக்கா’ (Sciatica) வலியாகவும் இருக்கலாம்.
கீல்வாதம் அல்லது லேபரல் கிழிவு போன்ற இடுப்பு மூட்டு பிரச்னைகளும் தொடைவலியாக வெளிப்படும். ரத்தக் கட்டிகள் அல்லது புற தமனி நோய் போன்ற வாஸ்குலர் பிரச்னைகள் ரத்த ஓட்டம் மற்றும் தொடைப்பகுதியில் வலியை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் செல்லுலிடிஸ் (Cellulitis ) அல்லது ஆஸ்டியோமைலிடிஸ் (Osteomyelitis) போன்ற தொற்றுகள், கட்டிகள்கூட இதே போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
தொடைவலிக்கான அடிப்படை காரணத்தைப் பொறுத்து சிறிய சுளுக்குகளுக்கு, ஓய்வு, ஐஸ் ஒத்தடம், தசை மசாஜ் மற்றும் உயரத்தில் காலை தூக்கி வைத்தல் (RICE) போன்றவை உதவும். குறிப்பிட்ட சில வலி நிவாரணிகள் அசௌகர்யத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கலாம். கிராம்ப்ஸ் பிரச்னைக்கு இளநீர், தண்ணீர், மோர் போன்றவற்றுடன் அதற்கான மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம்.

மிகவும் கடுமையாகவோ அல்லது தொடர்ந்தோ வலி ஏற்படும் சந்தர்ப்பங்களில், மருத்துவ ஆலோசனையை நாடுவது, எக்ஸ்ரே அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற சோதனைகள் முக்கியம். 2 -3 நாள்களுக்குள் கை வைத்தியத்திற்கு கட்டுப்படாத வலிகளுக்கு, குறிப்பிட்ட உடற்பயிற்சிகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அல்லது கார்டிகோஸ்டீராய்டு ஊசிகள், அறுவை சிகிச்சை ஆகியவை தேவைப்படலாம். எனவே, இந்த வலிக்கு இதுதான் காரணம் என நீங்களாக எதையாவது நம்பிக்கொண்டிருக்காமல், மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். உங்களுடைய தொடைவலி பிரச்னைக்கும் கிட்னி பாதிப்புதான் காரணம் என நம்பிக்கொண்டிருக்காமல், ஓய்வு, ரத்தக்கட்டுக்கான மருந்துகள், மசாஜ் போன்றவற்றை முதல்கட்டமாக முயற்சி செய்து பாருங்கள். அவை பலனளிக்காத பட்சத்தில் மருத்துவரை நாடுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.