அரசியல் தெளிவு இல்லாமல் வெறுப்புப் பிரசாரத்துக்குப் பலி கடாவாகும் ஓர் இளைஞனின் மனமாற்ற பயணமே இந்த `மலையாளி ஃப்ரம் இந்தியா’ (Malayalee From India).
கேரளாவிலுள்ள முல்லக்கரா பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான ஆல்பரம்பில் கோபி (நிவின் பாலி), மல்கோஷ் (தியான் ஸ்ரீனிவாசன்) ஊரில் வெட்டித்தனமாகச் சுற்றித் திரிகிறார்கள். சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி சண்டை செய்வது, காதல் செய்வதாக இளம்பெண்ணை ஸ்டாக் செய்வது, தீவிர இந்துத்துவா வலதுசாரி அமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வது ஆகியன இவர்களின் அன்றாட பணி. வாட்ஸ்அப் பார்வேர்டுகளை உண்மையென நம்பும் அப்பாவியானவர்களுக்கு அவர்கள் சார்ந்த கட்சியின் மூலம் அவர்களின் மனத்தில் மதத்துவேஷம் விதைக்கப்படுகிறது.

இந்தச் சுழலில் இந்தியாவுக்கு எதிரான ஒரு கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுகிறது. அந்நாளில் இஸ்லாமியச் சிறுவர்கள் வெடி வெடித்துக் கொண்டாடினார்கள் என்ற செய்தி பரவ, அதைக் கேள்விப்பட்ட மல்கோஷ், கோபியை அழைத்துச் சென்று கலவரம் உண்டாக்க முயல்கிறான். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கோபி புரிந்து கொள்வதற்குள் மல்கோஷ் செய்யும் ஒரு கொடூரமான செயல் கோபியின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. இதன் பின் அவர்கள் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை அரசியல் நையாண்டி + உணர்வுபூர்வமான காட்சிகளை வைத்துச் சொல்கிறது படம்.
பல வருடங்களுக்குப் பிறகு ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என கேமியோவில் கம்பேக் கொடுத்த நிவின் பாலிக்கு இது மீண்டும் நாயகனாக ஒரு முழுநீள படம். ஆனால் கம்பேக்?
இதுவும் ஒரு ‘கம்மிங் ஆப் ஏஜ்’ கதைதான். எந்த வேலைக்கும் செல்லாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் கையில் பத்து பைசா இல்லை என்றாலும் இந்தியப் பொருளாதாரம் பேசும் கதாபாத்திரத்தில் கிச்கிச்சு மூட்டுகிறார் நிவின் பாலி. குறிப்பாக அவரது தாயாருடன் போடும் ஒன்-லைனர்கள் அடிப்பொலியானு. இருந்தும் இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான இடங்களில் ஜீவன் மிஸ்ஸிங்கானு.

அரேபியப் பாலைவனத்தில் பாகிஸ்தானியராக வரும் தீபக் செத்தி எதிர்மறையான இடங்களில் தன் நடிப்பால் வெக்கை வீசுபவர், உணர்வுபூர்வமான இடங்களில் பாலைவன சோலையாகக் கண்களைப் பணிக்கிறார். எரிச்சலூட்டும் கதாபாத்திரத்தில் தியான் ஸ்ரீனிவாசன் சரியான தேர்வு. நாயகி அனஸ்வரா ராஜனை ஒரு பாடலுக்கு மட்டும் ஒப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வழக்கமான வெட்டி நாயகனின் தாயாக நடித்துள்ள மஞ்சு பிள்ளை நடிப்பில் குறையேதுமில்லை. ஒரு காட்சியில் வந்து போனாலும் சைன் டாம் சாக்கோ அரங்கில் சிரிப்பலையை விட்டுச்செல்கிறார். சம்பிரதாய காட்சிகளில் மட்டும் பயன்படுத்தி மூத்த நடிகரான சலீம் குமாரை வீணடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுதீப் இலமோன் அரேபியப் பாலைவனம், பாகிஸ்தான் மலைக் குன்றுகள், கேரளத்துப் பச்சை பசுமை என மாறிமாறி வெவ்வேறு இடங்களுக்குச் சிறப்பான ஒளியுணர்வை செட் செய்து பிரமிப்பூட்டுகிறார். பிரசங்கம் செய்வதற்காக அங்கு இங்கும் அலைந்து கொண்டிருந்த திரைக்கதையை மையப்புள்ளிக்குக் கொண்டு வரப் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் போராடித் தோற்றுள்ளார். ஜேக்ஸ் பிஜோய்யின் பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் என்றாலும் ஈர்க்கவே செய்கின்றன. சகோதரத்துவத்தையும், க்ளைமாக்ஸில் நெகிழ்ச்சியான உணர்வையும் கடத்தும் காட்சிகளில் சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார்.

“பாகிஸ்தானுக்கு போ” என்று இஸ்லாமியச் சகோதரர்களைத் தீவிரவாதியாகச் சித்திரிக்கும் வலதுசாரிகளின் அரசியல், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் எப்படிப் போலி ஐடி-க்களால் பரப்பப்படுகிறது என்பதையும், வகுப்புவாத அரசியலில் வெறுப்புணர்வில் சிக்கிப் பலியாகும் வெள்ளந்தி மனிதர்களின் பின்னணி என்ன என்பதையும் கேலியும் கிண்டலுமாக அரசியல் தெளிவோடு அடித்திருக்கிறார் ‘ஜனகணமன’ புகழ் திஜோ ஜோஸ் ஆண்டனி.
மதநல்லிணக்கம், ஒற்றுமை என நையாண்டி பாணியில் நகரும் திரைக்கதை ‘டக் டக்’ என சீரியஸாக மாறுவது படத்தினை எந்தக் கோணத்தில் பார்ப்பது என்ற தடுமாற்றத்தைக் கொடுக்கிறது. இருப்பினும் வன்முறையிலிருந்து தப்பிய இஸ்லாமியப் பெண்ணை குறி சொல்லும் நாட்டார் தெய்வம் முத்தப்பன் அரவணைத்துக் கொள்ளும் காட்சி ‘இந்தியச் சகோதரத்துவத்தின் சாட்சி’. அதேபோல பாகிஸ்தான் இளைஞனுக்கு சச்சின் டெண்டுல்கர் ஃபேவரைட் கிரிக்கெட்டராக இருப்பது, “மதத்துல அரசியல் கலந்த எந்த நாடும் உருப்படாது” என்று வரும் வசனங்கள் உள்ளிட்டவை தம்ப்ஸ் அப் பெறும் காட்சிகள்!
எலியை வைத்து குறியீடு சொல்லும் காட்சிகள் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் போக போக ரிப்பீட் மோடில் சலிப்பைத் தருகின்றன. இடைவேளை காட்சி ‘ஆடுஜீவிதம்’ படத்தை நினைவூட்ட, ஊரைவிட்டு ஓடிவந்த கோபி ஒரு பாகிஸ்தானிய நபரின் கீழே வேலை செய்கிறார் என்பது “அடுத்து என்ன நடக்கப்போகிறது” என்ற ஆவலைக் கூட்டுகிறது. ஆனால் வந்த ஆவலை எந்த திருப்பமும் சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதை அப்படியே நீர்த்துப் போகச் செய்துவிடுகிறது. அதேபோல நகைச்சுவை என்கிற பெயரில் பால்புதுமையினரை கிண்டல் செய்யும் விதமாக வைத்த அந்த ‘ஹோமோபோபிக்’ காமெடி, “எடோ சேட்டான்மாரே உபதேசமெல்லாம் ஊரிலிருக்கும் மற்றவர்களுக்குதானா?” என்று கேள்வி கேட்க வைக்கிறது.

க்ளைமாக்ஸ் காட்சியில் மனிதம், கல்விதான் நமக்கான விடுதலைக்கான சிறகுகள் என தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான விஷயத்தைப் பேசி சிந்திக்க வைத்தாலும், அந்தக் காட்சிகள் அதீத செயற்கைத் தன்மையோடு கையாளப்பட்டு ஏமாற்றம் அளிக்கின்றன.
மொத்தத்தில் இந்த `மலையாளி ஃப்ரம் இந்தியா’ அவனின் பயணத்தில் நம்மை ஓர் அங்கமாக்கவில்லை என்றாலும் எட்ட நின்று ரசிக்க வைக்கிறான்.