Dhoni: `என்றென்றும் அன்புடன் உங்கள் தோனி!' – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பரிசளித்த தோனி!

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை இன்று எதிர்கொண்டிருந்தது. போட்டியை வென்று முடித்தவுடன் தோனி மற்றும் சென்னை அணியின் வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறி பரிசளித்து மகிழ்ந்தனர்.

ராஜஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியை சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டிதான் சேப்பாக்கத்தில் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தோனியிடமிருந்து ஓய்வு குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமோ என்னும் அனுமானங்களும் இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தோனியின் ஓய்வைப் பற்றி இந்தப் போட்டியில் யாருமே பேசவில்லை. தோனியும் பேசவில்லை. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு தோனி மற்றும் சென்னை வீரர்கள் அத்தனை பேரும் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக, கலைஞர் கருணாநிதி கேலரிக்கு முன்பாக தோனி உட்பட சென்னை அணியின் வீரர்கள் எல்லாரும் வரிசையாக நிற்க சென்னை அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் வீரர்கள் அனைவருக்கும் தங்கப்பதக்கத்தை அணிவித்து கௌரவித்தார். ‘என்றென்றும் அன்புடன்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட டீசர்ட்டை வீரர்கள் அணிந்திருக்க எல்லாரும் ஒன்றாக நின்று க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அங்கிருந்து C கேலரி வழியாக தங்களின் நன்றி தெரிவிக்கும் நடையைத் தொடங்கியது சென்னை அணி. தோனியுடன் வீரர்கள் அனைவரும் ஒன்றாக அணிவகுத்து செல்ல வீரர்களுக்கு முன்பு ‘Nothing like our fans’ (எங்கள் ரசிகர்களை போல உயர்ந்தது எதுவும் இல்லை) என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டது. ‘தல போல வருமா..’ ‘Yellowrukkum Thanks’ என்பது போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ராட்சத பேனர்களும் மைதானம் முழுவதும் பறக்கவிடப்பட்டிருந்தது.

ரசிகர்களை நோக்கி கையசத்தவாறே வந்த தோனி மஞ்சள் நிற ஜெர்சி மற்றும் அவர் கையொப்பமிட்ட ஒரு பந்தை ரசிகர்களுக்கு பரிசாக வீசி சென்றார். தோனி இரண்டு காதோரங்களிலும் வெள்ளை நிற டை அடித்து புது லுக்கில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோனி இந்தப் போட்டியில் ஓய்வை அறிவிக்கவில்லை. தோனி தனது ஓய்வு முடிவை எப்போது எங்கே அறிவிக்க வேண்டும் என்கிற உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.