IPL 2024 : சன்ரைசர்ஸ் மீண்டும் ஒரு பிக் சேஸ்! பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேற்றம்

ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறலாம் என்ற நிலையில் சன்ரசைர்ஸ் அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாவிட்டாலும் வெற்றியுடன் நடப்பு ஐபிஎல் தொடரை நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. ஆனால், இந்த சீசன் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் அணி இப்போட்டியிலும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் குவித்தது. ஓப்பனிங் இறங்கிய இளம் வீரர் அதர்வா டைட் 27 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். 2 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளையும் விளாசினார். பிரப்சிம்ரன் சிங் மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார். அவர் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 7 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் விளாசி அமர்களப்படுத்தினார். அடுத்து வந்த ரைலி ரூசோவ், 24 பந்துகளில் 49 ரன்களும், 15 பந்துகளில் ஜிதேஷ் சர்மா 32 ரன்களும் குவித்தனர். இதனால் சவாலான ஸ்கோர் சன்ரைசர்ஸ் அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்க முடிந்தது. இதனையடுத்து சேஸிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி, ஹைதராபாத் எங்கள் சொந்த ஊரு, இங்க எங்கள தவிர வேறு யாரு ஸ்டாரு? என கேட்கும் வகையில் அதிரடி ஆட்டத்தை ஆடியது.

ஓப்பனிங் இறங்கிய டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே டக் அவுட்டானாலும் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். 6 மெகா சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் விளாசி அமர்களப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக ஆடிய ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்களும், நிதீஷ் ரெட்டி 25 பந்துகளில் 37 ரன்களும் விளாசினார். இவர்கள் அதிரடியில் வெற்றியை நோக்கி வேகமாக சன்ரைசர்ஸ் அணி முன்னேறிக் கொண்டிருக்கும் சூழலில் களமிறங்கிய ஹென்றி கிளாசனும் அதிரடியாக ஆடினார். அவர் தன் பங்குக்கு 26 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். முடிவில் 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் மிக மோசமாக இருந்தது. அந்த அணியில் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆடவில்லை. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தாலும், பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எல்லாம் அவர்கள் பந்துவீச்சு இல்லை. இதனால் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்று 9வது இடத்துடன் தொடரை நிறைவு செய்திருக்கிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.