"wait and see… 40 எம்.பிக்கள் உங்கள் ஆணவங்களை அடக்குவார்கள்" – திமுக முப்பெரும் விழா ஹைலைட்ஸ்

திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

“இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. நம் அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள, மக்களுக்குக் கிடைத்த வெற்றி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்கள், அம்பேத்கரின் அரசியல் சாசனம் முன்பு தலைகுனிந்து நிற்கின்றனர். இந்த மேடையில் உள்ள தலைவர்களிடையே அரசியல் உறவு இல்லை. இது கொள்கை உறவு. தேர்தல் அறிவித்த பிறகும் பாஜக விதிகளை மீறி வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டது.

திமுக முப்பெரும் விழா

ஒடிசாவிலும், பீகாரிலும் தமிழர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பினர். நாடாளுமன்றத்தில் 234 உறுப்பினர்கள் பாஜகவுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். 40 எம்பிக்கள் நாடாளுமன்றம் கேன்டீன் சென்று, வடை சாப்பிடுவார்கள் என சில அதிமேதாவிகள் கூறுகிறார்கள். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் கருத்துகளால் உங்கள் ஆணவங்களை அடக்குவார்கள். wait and see.

பலம் பொருந்திய எம்பிக்கள் இணைந்து, பலம் இல்லாத மைனாரிட்டி பாஜகவின் பாசிச செயல்களைத் தடுத்து நிறுத்தங்கள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஜகவைத் தடுத்து, அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கும் அரணாக 40 எம்பிக்கள் இருப்பார்கள்.

திமுக முப்பெரும் விழா

சட்டமன்ற தேர்தல் வரும்போது, அதிமுக வசமுள்ள தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனச் சிதம்பரம் கூட்டத்தில் பேசினேன். தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்துப் பேசினேன். தமிழக மக்களின் நம்பிக்கை வீண் போகாது. தமிழகத்தில் இனி எப்போதும் திராவிட மாடல் ஆட்சிதான் என்ற நிலை உருவாக உழைப்போம்.”

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்..!

“தென்னிந்தியாவில் பாஜகவால் காலூன்ற முடியாத ஒரே மண் தமிழ்நாடு மட்டும்தான். எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் வெல்ல முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு இந்த பாராட்டு விழா போதாது. அகில இந்தியத் தலைவர்கள் கூடி அவருக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும். தேர்தல் காலத்தில் கூட்டணி அமையும். பிறகு சிதறிவிடும். அது அடுத்த தேர்தலில் தொடராது. பாஜக – அதிமுக கூட்டணி அப்படித்தான். ஆனால் இது மக்கள் நலனுக்காக உருவான கூட்டணி. 4 தேர்தல்களைக் கூட்டணி சந்தித்து வென்றுவிட்டது. திமுக 5 லட்சம் வாக்குகளில் வென்ற திண்டுக்கல்லைக் கம்யூனிஸ்ட்களுக்கு கொடுத்தவிட்டு, கோவையில் திமுக நேரடியாக இறங்கி ரிஸ்க் எடுத்தது.

திமுக முப்பெரும் விழா

இதுதான் அவரின் ஆளுமை. இங்கே மழைக்கால தவளை போல, ‘தாமரை மலரப் போகிறது.’ எனக் கத்திக் கொண்டிருந்தவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ரிஸ்க் எடுத்தனர். திருமாவளவனை விசிக வேட்பாளர் என பார்க்காமல் திமுக வேட்பாளராகப் பார்த்து வெற்றி பெற வைத்தார். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அமைச்சர்களிடம் நிலவரத்தை விசாரித்தார். காங்கிரஸ் காரர்களே, அடுத்த பிரதமர் யார் என்று சொல்லாத நிலையில் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முன்னிறுத்தியவர் ஸ்டாலின். அகில இந்தியளவு பாஜவை வீழ்த்த மிக முக்கியமான ஒருங்கிணைப்புகளை முன்னெடுத்தார்.”

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:

“தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற முதல்வர் ஸ்டாலினின் ஒருங்கிணைப்பு முக்கியமானது. சில மாநிலங்களில் நம் கூட்டணியினர் பெரியண்ணன் மனநிலையில் நடந்துகொண்டதால் அங்கு பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனச் சொல்லிக்கொண்டிருந்த அதிமுக, இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்து யாருக்கு உதவுகிறார்கள்.

திமுக முப்பெரும் விழா

இதன்மூலம் அவர்கள் அடுத்து எங்கு செல்லப் போகிறார்கள் எனத் தெரிகிறது. நம் கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைப்புடன் பணியாற்றி விக்கிரவாண்டியில் வெற்றி பெற வேண்டும்.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

“நம்முடைய முதலமைச்சர் கைகாட்டுபவர் பிரதமராகும் காலம் விரைவில் உருவாகும். மோடியால் கூட்டணி ஆட்சி நடத்த முடியாது. மோடியால் நாடாளுமன்றத்தில் வாலாட்ட முடியாது. விரைவில் பாஜக ஆட்சி கவிழும். தேர்தல் ஆணையம் சரியாகச் செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். கோவையில் நாங்கள் வெற்றி பெற்றதால், இந்தத் தொகுதியைக் கேட்டோம். ஆனால் முதல்வர் எங்களை திண்டுக்கல்லில் போட்டியிடச் சொன்னார்.

திமுக முப்பெரும் விழா

நாங்கள் தயங்கினோம். கோவையில் அண்ணாமலை என்ற அருவருக்கத்தக்கச் சக்தியை வீழ்த்த திமுக இங்கு நேரடியாகக் களமிறங்கிவிட்டு, அவர்கள் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை எங்களுக்குக் கொடுத்து, தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக எடப்பாடி அறிவித்துள்ளார். அவரை மக்கள் எப்போதோ புறக்கணித்துவிட்டனர்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.