பங்குச் சந்தை என்றால் காளைகளும், கரடிகளும் நம் நினைவுக்கு வரும். பங்குச் சந்தை ஏற்றத்தை காளைகளும், சந்தை இறக்கத்தை கரடிகளும் குறிக்கின்றன. ஆனால், சமீப காலமாக பங்குச் சந்தையின் மதிப்பு மிகுதியாக இருந்தாலும் கூட, சந்தை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதை வைத்து, புதிதாக தவளை, பன்றி, கழுகு, குரங்கு என புதிதாக நான்கு உயிரினங்களையும் சந்தைக் குறியீடுகளாக சேர்த்துள்ளார் கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சீவ் பிரசாத். இந்த நான்கு உயிரினங்களும் எதைக் குறிக்கின்றன என்பதை பார்க்கலாம்..

தவளைகள்..
வற்றாத குளத்தை கண்ட தவளைகள் தொடர்ந்து அந்த குளத்திலேயே தங்கிவிட்டன. சமீபத்தில் அந்தக் குளம் சூடேறிவிட்டது. ஆனால், சூட்டைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு தவளைகள் தயாராகிவிட்டன. நிச்சயமாக குளம் குளிர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவை இருக்கின்றன. பங்குச் சந்தையில் மதிப்பு அதிகமாகிவிட்டதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் முதலீட்டாளர்களை தவளைகள் என்கிறார் சஞ்சீவ் பிரசாத்.
பன்றிகள்..
குளத்தில் நீர் நிறைந்துகொண்டிருக்கிறது என்பதையும் அறியாமல் பன்றிகள் நீந்திக்கொண்டிருக்கின்றன. காட்டின் விதிகளை மறந்து நீந்திக்கொண்டிருக்கும் பன்றிகள், பங்குச் சந்தையில் உள்ள அபாயங்களை அறியாமல், லாபத்தில் மட்டும் கண்ணை வைத்து பணத்தைக் கொட்டும் முதலீட்டாளர்களை குறிக்கின்றன.

கழுகுகள்..
கழுகுகள் அந்நிய முதலீட்டாளர்களை குறிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்நிய முதலீட்டாளர்கள் சீனா போன்ற வேறு சந்தைகளுக்கு இடம்மாறிவிட்டனர். ஆனால், மற்ற சந்தைகளில் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், சில முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தைக்கே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்நிய கழுகுகளுக்கு (அந்நிய முதலீட்டாளர்களுக்கு) இதுவரை அதிருப்தியே மிஞ்சியுள்ளது என்கிறார் சஞ்சீவ் பிரசாத்.
குரங்குகள்..
எப்போதும் பங்குச் சந்தை சார்ந்த விஷயங்களையே பேசிக்கொண்டிருப்பது, பங்குச் சந்தையின் போக்கை கணிப்பது, அடிப்படைகள் இல்லாமலேயே யூகங்களை வைத்து கருத்துகளை சொல்வது என தொடர்ந்து பங்குச் சந்தை பற்றியே விவாதங்களைச் செய்து முன்பை விட இப்போது அதிகரித்துவிட்டது. இவர்களைத்தான் குரங்குகள் என சஞ்சீவ் பிரசாத் கூறுகிறார்.
பங்குச் சந்தையை அளவுக்கு மீறி ஏற்றுபவர்களையும், அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சவாரி செய்பவர்களையும் குறிக்கும் வகையில் இந்த உயிரினங்களை உதாரணமாக சஞ்சீவ் பிரசாத் சொல்லியிருக்கிறார்.