பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் டிஎஸ்பி அலுவலகத்துக்கு போராட்டம் நடத்த வந்த விவசாயி ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தடையை மீறி, கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை அடுத்து போலீஸார், கள் இறக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக, இன்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமையில், பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த தென்னை விவசாயி பாலசுப்ரமணியம் என்பவர் மறைத்து எடுத்து வந்த பூச்சிக்கொல்லி மருந்தை திடீரென எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் வேகமாக ஓடிவந்து பாலசுப்பிரமணியத்தை தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த பூச்சிக்கொல்லி மருந்து கைப்பற்றினர்.
அப்போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் மாநில சங்க தலைவர் பாபு நம்மிடம் பேசுகையில், “தமிழகத்தில் விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம்.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு எங்கள் சங்கம் சார்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.ஆனால், அந்த சம்வத்தை தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கள் இறக்கக்கூடாது என போலீஸார் கெடுபிடிகாட்டி வருகின்றனர்.
நாங்கள், கள் இறக்குவதை நிறுத்த மாட்டோம். கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு அனுமதி இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கின்றனர். கள் குறித்து தமிழக அரசின் கொள்கை முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம், டாஸ்மாக் மதுவை, கள்ளுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
கள்ளில் 7 விதமான சத்துகள் உள்ளன. அது உணவின் ஒரு பகுதி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 47 -வது பிரிவின் படி கள்ளுக்கு அனுமதி கொடுக்கலாம். அதன் அடிப்படையில்தான் பிற மாநிலங்களில் அனுமதி அளித்துள்ளனர். டாஸ்மாக்கில் விலை அதிகம் என்பதால்தான் கள்ளச் சாரயத்தை நாடிச் செல்கின்றனர். இரண்டையும் ஒழிக்க வேண்டும். கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.