புதுடெல்லி: கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 750 பேர் கலந்து கொள்ளவில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு, தேர்வு முறையில் முறைகேடு, கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண் போன்றவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடந்த போராட்டங்களின் எதிரொலியாக கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமாரும் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கான நீட் இளங்கலை மறுதேர்வு இன்று (ஜூன் 23) நடைபெற்றது. சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த மறுதேர்வில் 813 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
750 பேர் இந்த மறுதேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. சத்தீஸ்கரில், மறுதேர்வு எழுதவேண்டிய 602 பேரில் 291 பேரும், ஹரியானாவில் 494 பேரில் 287 பேரும், மேகாலயாவில் 464 பேரில் 234 பேரும் எழுதினர். சண்டிகரில் எழுத வேண்டிய இரண்டு மாணவர்களும் வரவில்லை. குஜராத்தில் ஒரு மாணவர் எழுதினார்.
கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களில் 48% பேர் மறுதேர்வில் கலந்து கொள்ளாதது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இன்னொருபுறம், பிஹாரில் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.