இந்திய ராணுவ கொள்கையில் திருத்தம் தேவை; வீரர் அன்ஷுமான் சிங்கின் பெற்றோர் வேண்டுகோள்

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தின் சியாச்சின் பனிமலை பகுதியில் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் கேப்டன் அன்ஷுமான் சிங். கடந்த ஆண்டு ஜூலை 19-ந்தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் வெடிபொருள் கழிவு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அவர் அனுப்பப்பட்டார்.

அவர், தீயால் சூழ்ந்த பகுதியில் சிக்கியிருந்த 4 முதல் 5 பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தபோது, தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்தது. இதனால், அவர் அந்த பகுதிக்கு மீண்டும் சென்றார். ஆனால், அதில் இருந்து அவரால் வெளியே வர முடியவில்லை. தீயில் சிக்கி அவர் உயிரிழந்து விட்டார்.

அவருடைய மறைவை அடுத்து, கடந்த 5-ந்தேதி அவருடைய மனைவி ஸ்மிரிதி சிங் மற்றும் தாயார் மஞ்சு சிங் ஆகியோர் ஜனாதிபதி முர்முவிடம் இருந்து நாட்டின் 2-வது உயரிய வீரதீர கீர்த்தி சக்ரா விருதினை பெற்று கொண்டனர்.

இந்நிலையில், அன்ஷுமான் சிங்கின் பெற்றோர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்திய ராணுவத்தில் உள்ள விதியில் திருத்தம் வேண்டும் என தெரிவித்தனர்.

இதுபற்றி அன்ஷுமான் சிங்கின் தந்தை ரவி பிரதாப் சிங் கூறும்போது, அவருடைய மகன் மறைவை தொடர்ந்து, அதற்கான நிறைய உரிமைகளை மருமகள் பெற்று கொண்டார். ஆனால், அவர் தங்களுடன் வசிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தங்களுடன் இருப்பது தங்களுடைய மகனின் சுவரில் தொங்கும் புகைப்படம் ஒன்று மட்டுமே என கூறியுள்ளார்.

அதனால், வீரரின் மனைவிக்கே அனைத்தும் என்று உள்ள ராணுவ விதி சரியல்ல என அவர் கூறுகிறார். வீரமரணம் அடைந்தவரின் மனைவி அவருடைய குடும்பத்தினருடன் வசிக்க வேண்டும். ஏனெனில், அந்த குடும்பம் பல விசயங்களில் அவரை சார்ந்திருக்கும் என்றார். கணவர் கூறிய விசயங்களை பிரதிபலித்த மஞ்சு சிங், கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என நாங்கள் கோருகிறோம். இதனால், இதுபோன்ற கடின தருணங்களை மற்ற பெற்றோர்கள் எதிர்கொள்ளாமல் தடுக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.