“துரோகத்தால் பாதிக்கப்பட்டவர் உத்தவ் தாக்கரே” – ஜோதிர்மட சங்கராச்சாரியார் கருத்து

மும்பை: “துரோகத்தால் பாதிக்கப்பட்டவர் உத்தவ் தாக்கரே. அதனால் அனைவரும் வேதனையடைந்தனர். அவர் மீண்டும் முதல்வராகும் வரை அந்த வேதனை நீங்காது” என்று ஜோதிர்மட சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளார்.

ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லமான மாடோஸ்ரீயில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், “நாம் அனைவரும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். பாவம் மற்றும் புண்ணியத்துக்கு ஒரு வரையறை உள்ளது. துரோகம் செய்வது மிகப் பெரிய பாவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரேவுக்கும் துரோகம் நடந்துள்ளது. அவர் எதிர்கொண்ட துரோகத்தால் நாங்கள் அனைவரும் வேதனையடைந்தோம் என்று நான் அவரிடம் (உத்தவ் தாக்கரே) கூறினேன். அவர் மீண்டும் மகாராஷ்டிர முதல்வராகும் வரை எங்கள் வலி நீங்காது” என்று தெரிவித்தார்.

ஜூன் 2022-இல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோத்து ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். பிப்ரவரி 2023-இல், இந்திய தேர்தல் ஆணையம் ஷிண்டே பிரிவை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்தது.



இந்த பின்னணியில், எந்த ஒரு நபரின் பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல், சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தர், “வஞ்சகம் செய்பவன் இந்துவாக இருக்க முடியாது. அதனை பொறுத்துக்கொள்பவனே இந்து” என்று குறிப்பிட்டார். மேலும், “மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த மக்களும் துரோகத்தால் வேதனையடைந்துள்ளனர். இது சமீபத்திய (மக்களவை) தேர்தலில் பிரதிபலித்தது” என்றும் அவர் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.