ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் ஓய்வா? அடுத்த உலக்ககோப்பை வரை டைம் இருக்கு பாஸ்

Rohit sharma ODI Retirement News Tamil latest : அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை வென்றவுடன் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளிலும் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை அவருக்கு இந்த பார்மேட்டில் கடைசியாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை, அவ்வளவு தூரத்துக்கு இன்னும் நான் யோசிக்கவே தொடங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரோகித் சர்மா, ” 20 ஓவர் பார்மேட்டில் ஓய்வை அறிவிப்பதற்கு இதைவிட சிறந்த தருணம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக நான் இந்த பார்மேட்டில் தான் விளையாடவே தொடங்கினேன். அதனால் டி20 உலககோப்பை வெல்ல வேண்டும் என விரும்பினேன். அது நடந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. இந்த கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். கடைசியாக அது நடந்திருக்கிறது என்பது பெரு மகிழ்ச்சி. அதனை விவரிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளில் இன்னும் கொஞ்ச நாட்கள் விளையாட விரும்புகிறேன். அதில் ஓய்வு பெறுவது குறித்து நான் சிந்திக்க தொடங்கவில்லை” என கூறினார்.

இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டி வரை விளையாடுவாரா? என்பது அடுத்தடுத்த தொடர்களில் ரோகித் சர்மா ஆடும் விதத்தைப் பொறுத்து முடிவாகும். ஏனென்றால் இப்போதைக்கு சாம்பியன்ஸ் டிராபி வரை அவர் இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்குப் பிறகு ரோகித் சர்மா, இரண்டில் எந்த பார்மேட்டில் விளையாடப்போகிறார் என்பது திட்டவட்டமாக தெரியும். 

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளதால், அவர் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே இடம், தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுபவர்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என தெளிவாக கூறிவிட்டார். அவரின் அணுகுமுறை ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு செட்டாகுமா? என தெரியவில்லை. எனவே, கம்பீரின் அணுகுமுறையை பொறுத்து இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் இருக்கிறது என்பது மட்டும் இப்போது உறுதியாக கூற முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.