சிஎன்ஜி-யில் டூவீலர்களைக் கொண்டு வரும் திட்டம் எப்போதிருந்தோ நடைமுறையில் இருக்கிறது. ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதானே இங்கே டாஸ்க்! ஆட்டோமோட்டிவ் துறையில் பூனைனு நினைச்சு மணி கட்டினால், யானையாக வலம் வருகிறது பஜாஜ் அறிமுகப்படுத்திய ஃப்ரீடம் 125 பைக்.
‛நாங்களும் சளைச்சவங்க இல்ல’ என்று டிவிஎஸ்-ஸும் இப்போது சிஎன்ஜி பக்கம் டயர் வைத்து விட்டது. தனது ஃப்ளாக்ஷிப் ஸ்கூட்டர் மாடலான ஜூபிட்டரில்தான் அது சிஎன்ஜி எரிபொருளைக் கொண்டு வரப் போவதாகத் தகவல் கசிந்திருக்கிறது.
இது பற்றி டிவிஎஸ் தலைமையிடம் நாங்களே போன் பேசிக் கேட்டபோது, ‛‛அப்படியா, எங்களுக்கே தெரியாதே’’ என்கிற தொனியில்தான் ஆர்வமாகக் கேட்டார்கள். ‛அடங்கொக்கா மக்கா விஷயம்’ என்னவென்றால், டிவிஎஸ் – தனது ஜூபிட்டர் சிஎன்ஜி-க்கான டெஸ்ட்டிங்கைத் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான். U740 என்கிற குறியீட்டுப் பெயரில் இன்டர்னலாக இதன் டெஸ்ட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

ஃப்ரீடம் போலவே இதிலும் சிஎன்ஜி மற்றும் பெட்ரோலுக்கான ஸ்விட்ச் இருக்கும். சிஎன்ஜி காலியானால், தானாகவே பெட்ரோலில் டாகிள் ஆகிக் கொள்ளும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என டூயல் செட்அப் எரிபொருள் கொண்ட இதைத் தயாரிக்கும்போது, பாதுகாப்பு மற்றும் புதிய பாகங்களுக்கான டெஸ்ட்டிங்கும் R&D-யும் மிக மிக அவசியம். டிவிஎஸ்-ஸை அதில் குறை சொல்லவே முடியாது.
அதனால், இதற்கான கால அவகாசம் கொஞ்சம் ஆகலாம் என்கிறார்கள். இந்த ஆண்டு முழுமைக்கும் இதற்கான சோதனைகள் நடக்கும். அதிகப்படியாக 2025 முதல் காலாண்டுக்குள் இதைக் கொண்டுவந்துவிடத் திட்டம் இருக்கிறதாம் டிவிஎஸ்-ஸிடம்.

மோட்டார் விகடன் சார்பாக நாங்கள் டிவிஎஸ் ஃபேக்டரிக்குள் பலமுறை விசிட் அடித்திருக்கிறோம். எக்கோ சிஸ்டம் நடைமுறையை அதிகமாகக் கையாள்வதில் ஆர்வம் காட்டும் இந்த நிறுவனம். சிஎன்ஜி-யைத் தொடர்ந்து கார்பன் மாசுக்களை வெளியிடாத எலெக்ட்ரிக்கிலும் முனைப்பு காட்ட இருக்கிறார்களாம். இப்போதைக்கு ஐக்யூப் மட்டும்தான் டிவிஎஸ்-ல் இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். அதேபோல், Creon என்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரொம்ப நாட்களாகப் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் X என்கிற பெயரில் வந்தாலும் வரும். இதைத் தொடர்ந்து 3வீலர்களிலும் கவனம் செலுத்தப் போகிறது இந்நிறுவனம்.
இப்போதைக்கு ஜூபிட்டர் 125 பெட்ரோல் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை சுமார் 1 லட்சத்தைத் தாண்டுகிறது. சிஎன்ஜி ஸ்கூட்டர் வந்தால், இதன் எக்ஸ் ஷோரூம் விலை 1 லட்சத்துக்குள் பொசிஷன் செய்யப்படலாம். அதேபோல் ஃப்ரீடம் போல சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டுக்கும் தலா 2 கிலோ மற்றும் 2 லிட்டர் என டேங்க்கை வடிவமைக்குமா என்றும் தெரியவில்லை.
இந்தியாவின் முதன் சிஎன்ஜி பைக் பஜாஜ்; முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் டிவிஎஸ்! சபாஷ், போட்டி நல்லாத்தான் இருக்கு!!