இதற்காகத்தான் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கமா?

India vs Sri Lanka: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டு அவரது கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாட உள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அணியை வெளியிட நீண்ட விவாதம் நடைபெற்று, அணிகள் வெளியிடப்பட்டன. பிசிசிஐ அணிகளை வெளியிட்டதில் இருந்து பல சர்ச்சைகளும் கிளம்பி உள்ளன. டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா இலங்கை தொடரில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சுப்மான் கில் பொறுப்பேற்றுள்ளார்.

இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐபிஎல் 2024ல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தர அவரும் ஒரு காரணம். இந்நிலையில் டி20 அணியில் இருந்து ஹர்திக்கின் கேப்டன்சி நீக்கப்பட்டதற்கு உடற்தகுதி பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது. பயிற்சியாளர் கம்பீர், ஹர்திக் பாண்டியாவிடம் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஹர்திக் ஒருநாள் இடம் பெறவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறினார்.

தற்போது வெளியான தகவலின்படி, கம்பீர் மற்றும் தேர்வுக்குழு ஹர்திக் பாண்டியாவிடம் சில விஷயங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, அணியில் தொடர்ந்து இடம் பெற முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை கேட்டுக்கொண்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா தான் இந்தியாவின் முதன்மையான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருப்பதால், அவர் காயம் அடைந்தால் அணிக்கு பெரிய இழப்பாக உள்ளது. ஹர்திக் பாண்டியா விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டும் என்றும், பரோடா அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் 10 ஓவர்கள் வீச வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஹர்திக் முழு உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரது பெயர் இருக்காது.

எனவே, உள்ளூர் போட்டிகளில் ஹர்திக் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். மறுபுறம் சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான அணியில் முதன்மை ஆல்-ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேலை பிசிசிஐ பரிசோதித்து வருகிறது. இலங்கை தொடரில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் நிதிஷ் ரெட்டியும் இந்த லிஸ்டில் இருக்கிறார். டி20யில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இல்லை. ஷிவம் துபே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (C), ஹுப்மன் கில் (WC), விராட் கோலி, கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.