Cinema Roundup: `5 வருடத்திற்குப் பிறகு என்ட்ரி கொடுக்கும் ஹீரோ!' – இந்த வார டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா செய்திகளை இங்கே பார்க்கலாம்

பெரிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கான ‘அமரன்’ திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்திருக்கிறார்கள். இதே போல கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’ திரைப்படமும் வருகிற செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘தங்கலான்’ திரைப்படமும் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு.

Amaran and Meyazhagan

இவை மூன்றையும் தாண்டி இந்தாண்டு அடுத்தடுத்து வெளிவர இருக்கும் பெரிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸாகிறது என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், விஜய் நடிக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படமும் அக்டோபர் மாதம் வெளியாகிறது என லைகா நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அஜித் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படமும் கமல் ஹாசன் நடித்திருக்கும் ‘Thug life’ திரைப்படமும் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத்தின் ஸ்டார்ட் அப்!

சினிமா பிரபலங்கள் பலரும் சினிமாவில் ஒரு புறம் நடித்துக் கொண்டே மற்றொரு பக்கம் பிசினஸையும் தொடங்கி நடத்தி வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் நடிகர், நடிகைகள் பலரும் உணவகங்கள் உட்பட பல பிசினஸில் ஈடுபடுகிறார்கள். தற்போது அனிருத்தும் புதிய பிசினஸ் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ‘Piece Of Rock’ என்ற ஆடை பிசினஸை அனிருத் தற்போது தொடங்கியிருக்கிறார். இந்த ஆடை பிசினஸ் தொடர்பான பதிவுகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அனிருத்தும் பதிவிட்டு வருகிறார்.

Anirudh & Prashanth

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் டாப் ஸ்டார்!

பிரசாந்த் நடிப்பில் ‘அந்தகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நிறைவு பெற்றது. சில காரணங்களால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானது. தற்போது இத்திரைப்படமும் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்திருக்கிறது. பாலிவுட் இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் இத்திரைப்படம். பிரசாந்த் ராம் சரணுடன் இணைந்து நடித்திருந்த ‘வினைய விதேயா ராமா’ திரைப்படம் கடந்த 2019- ஆண்டு வெளியானது. கிட்டதட்ட 5 வருட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்தின் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதுமட்டுமின்றி, விஜய்யுடன் இவர் இணைந்து நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படமும் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

காத்திருப்புக்குப் பின் திரைக்கும் வரும் ‘மின்மினி’!

இயக்குநர் ஹலிதா ஷமீம் ‘மின்மினி’ என்ற திரைப்படத்தின் முதல் பாதியை கடந்த 2015 ஆண்டே எடுத்து முடித்துவிட்டார். அந்த திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களெல்லாம் வளரும் வரை 7 ஆண்டு காத்திருந்து அத்திரைப்படத்தின் இரண்டாம் பாதியை கடந்த 2022- ஆண்டு எடுத்தார். தற்போது அத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என்பதை தனது சமூக வலைதளப் பக்கங்களில் இயக்குநர் ஹலிதா ஷமீம் அறிவித்திருக்கிறார்.

Minmini & Kadaisi Ulaga Por

மீண்டும் டைரக்ஷனில் ஹிப் ஹாப் தமிழா !

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடித்திருந்த ‘பி. டி சார்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இவரே எழுதி இயக்கி தயாரித்தும் வருகிறார். இத்திரைப்படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதிரடி கிராபிக்ஸ் காட்சிகளுடன் கூடிய இத்திரைப்படத்தின் கிளிம்பஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தில் ஆதியுடன், நட்டி, அனகா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.