“ஓ மத்த ஜானர்கள்ல இப்படித்தான் நடிக்க வேண்டியிருக்கும்னு எனக்கு ஐடியா இருக்கும். ஆனா, ஹாரர் பத்தி அப்படி ஏதும் ஐடியாவே ஆரம்பத்துல எனக்கு இல்ல. முதல் நாள் படப்பிடிப்புக்கு எந்த ஐடியாவும் இல்லாமல்தான் போனேன்.
ஹாரர் படத்துல நடிக்கிறது சவாலானது. ஆக்ஷன் படம் பண்ணுறதைவிட, ஒரு டிராமா பண்ணுறதைவிட, அதிகமான மெனக்கெடல் ஹாரருக்கு நாம கொடுக்க வேண்டியிருக்கும். ஏன்னா, நம்ம எதிரே யாருமே இருக்க மாட்டாங்க. பேய் இருக்கறது, அது பயமுறுத்துறதுன்னு எல்லாமே கிராபிக்ஸ்ல பண்ணிக்குவாங்க. அதனால நாம தனி ஆளா பர்ஃபாம் பண்ணிட்டிருக்கணும். நாம பயப்படுறது திரையிலும் தெரியணும்னா, மூச்சு வாங்குறது, அலறிக் கத்துறது, பயந்து ஓடுறதுன்னு ஒவ்வொரு விஷயத்துக்குமே தனியா மெனக்கெடணும்”
– மூச்சு வாங்காமல் பேசுகிறார் பிரியா பவானி சங்கர். சமீபத்திய `இந்தியன் 2′ ரிலீஸுக்குப் பின், இப்போது `டிமான்டி காலனி 2′, `இந்தியன் 3′ என அசத்தலான லைன் அப்களை வைத்துள்ளார்.

கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியின் `இந்தியன் 2′-ல் அசத்தியிருந்தீங்க?
“நன்றிங்க. ஷங்கர் சார் படம்… கமல் சார் நடிக்கறார்… அந்தப் படத்துல நமக்கு ஒரு வாய்ப்பு வருது எனும் போது, அந்த சான்ஸை நழுவ விடக் கூடாதுன்னுதான் யாரா இருந்தாலும் நினைப்பாங்க. அந்தப் படத்துல நடிக்கறதே, சந்தோஷமான தருணங்களா இருந்துச்சு. என் ஃப்ரெண்ட்ஸுங்ககிட்ட நான் கமல் சார் படத்துல நடிக்கறேன்னு சொன்னதும், `நாங்களும் கமல் சாரைப் பார்க்கணும். அவரோட புகைப்படம் எடுத்துக்கணும்’னு விரும்பினாங்க.
இசைவெளியீட்டு விழாவுல, புரொமோஷன் நிகழ்ச்சியின்போது என் ஃப்ரெண்ட்ஸையும் அழைச்சிட்டுப் போய், கமல்சார் கிட்ட அறிமுகப்படுத்தலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, அந்தச் சமயத்துல நான் வெளிநாட்டுல இருந்ததால, நிகழ்ச்சியில கலந்துக்கமுடியல.
ஷங்கர் சார், கமல் சார் ரெண்டு பேர்கிட்டே இருந்தும் நிறைய கத்துக்கிட்டேன். இப்படி ஒரு பெரிய படத்துல எனக்கு நிறைய ஸ்பேஸ் இருந்தது. கடந்த ஐந்து வருடங்கள்ல வெளியான பெரிய ஹீரோக்கள் படங்கள்ல எத்தனை படங்கள்ல ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது சொல்ல முடியும்னு பார்த்தால், எதுவும் இல்லை. ஆனா, `இந்தியன் 2′-ன் தருணங்களுக்காகவே மறுபடியும் அந்த காம்பினேஷனோடு ஒரு படம் பண்ண ரெடியா இருக்கேன்.”

என்ன சொல்றார் கமல்ஹாசன்?
“ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. கமல் சார் சினிமாவில் லெஜண்ட். ஆனா, ஒரு சீன்ல நடித்து முடித்ததும் அது நல்லா வந்திருக்கா, `ஓகேவா?’னு ஷங்கர் சார்கிட்ட அப்ரூவல் கேட்பார். படப்பிடிப்பில் நூறு சதவிகிதம் உழைப்பார். அவரோடு நடிக்கும் போது அவரது கண்களை மட்டும் ஃபாலோ பண்ணினாலே போதும்… நாம ஈஸியா நடிச்சிடலாம்.”
`டிமான்டி காலனி’ முதல் பாகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பாகம் 2 எப்படி வந்திருக்கு?
“நல்லா இருக்கு. ஒரு படத்தின் செகண்ட் பார்ட்டை எடுக்கணும் என்பதே, முதல் பார்ட்டுக்குக் கிடைத்த வரவேற்புனாலதான், அந்தப் படத்தின் இரண்டாம் பார்ட்டையும் எடுக்கலாம்னு ஒரு இயக்குநருக்குத் தோணியிருக்கலாம். ஆனா, முதல் பார்ட்டைப் போல, அடுத்த பார்ட்டிற்கு எதிர்பார்ப்பு இருக்கறதைப் பூர்த்தி செய்வது கொஞ்சம் கடினமான விஷயம்தான். `டிமான்டி காலனி 2′ கதையைக் கேட்டதும், இம்ப்ரஸ் ஆகிட்டேன். ஏன்னா அருள்நிதி சார் இருந்தாலும், ஹீரோயினுக்குப் பெரும்பகுதி ஸ்கோப் இருக்கற கதையை அவர் தேர்ந்தெடுத்திருக்கார். எனக்கு நிறைய ஸ்கோப் இருந்ததால, விட மனசில்ல. நடிக்கறேன்னு உடனே சொல்லிட்டேன்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து அருமையா கதை சொல்லுவார். அவருடைய முந்தைய படங்கள் ஒவ்வொண்ணுமே ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். அதிலும் ஹாரர் படங்கள் பண்ணுறது அவருக்குப் பிடித்த ஜானர்னால ரசித்து இயக்கியிருக்கார்னு சொல்லலாம். சாம் சி.எஸ்-ஸின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். த்ரில்லர் படத்துக்குப் பொருத்தமான இசையைக் கொடுத்திருக்கார்.”
`இந்தியன் 3′-ல் உங்களை எதிர்பார்க்கலாமா?
“நிச்சயமா! ஆனா, `இந்தியன் 2′ அளவுக்கு என் போர்ஷன் `இந்தியன் 3′-ல் இருக்காது.”
சினிமாவில் நீங்க எவ்ளோ பிஸியா ஓடினாலும், உங்க குடும்பத்துக்கும் சரியா நேரம் ஒதுக்குறீங்களே?
“நான் சினிமா பின்னணியில் இருந்து வந்த பொண்ணு இல்ல. நடிக்க வர்றதுக்கு முன்னாடி, சினிமா பார்க்கறதே ரொம்ப அரிது. வருஷத்துக்கு ரெண்டு படம்தான் அப்பா அழைச்சிட்டுப் போவாங்க. அதிலும் விஜயகாந்த் படம்னா, கண்டிப்பா கூட்டிட்டுப் போவாங்க. நாங்க பார்த்து வளர்ந்த சினிமானா அதான்.
ஒரு டீச்சர் போல, ஒரு டாக்டர் போல, சினிமாவும் ஒரு புரொஃபஸன். அவ்வளவுதான். வீட்டுக்குப் போனா… எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை என்பது போலதான் இருப்பேன். என் நட்பு வட்டங்களும் சினிமா சம்பந்தமில்லாதவங்களா இருக்கறதால, அவங்களுக்காக நேரம் ஒதுக்குறேன்.”