Doctor Vikatan: என் வயது 32. எனக்கு உடல் எடை குறைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. அளவாகச் சாப்பிடுகிறேன், தினமும் நடைப்பயிற்சி செய்கிறேன். ஆனாலும், என் எடை குறையவே இல்லை. மதியத்தில் தினமும் சிறிது நேரம் தூங்கும் வழக்கம் உண்டு. அதனால்தான் எடை குறையாமலிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

இந்தக் கேள்விக்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், தூக்கம் பற்றிய முக்கியமான தகவலைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. ஒரு நபர், ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், அதை குறைவான தூக்கம் என்று சொல்கிறோம்.
போதுமான அளவு தூக்கம் இல்லாதபோது, அது பலவித பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, பிஎம்ஐ எனப்படும் உடல்நிறைக் குறியீடு அதிகரிக்கும் என்கின்றன. தொப்பை போடும், வயிற்றையும் இடுப்பையும் சுற்றி டயர் மாதிரி சதை திரட்சி ஏற்படும்… இதெல்லாம் சேர்ந்து உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கும் என்கின்றன அந்த ஆய்வுகள்.
ஆங்கிலத்தில் ‘பவர் நாப்’ (power nap) என்று சொல்வார்கள். பகல்நேரத் தூக்கத்தைக் குறிப்பது இது. இந்தத் தூக்கமானது அதிகபட்சமாக 30 நிமிடங்களைத் தாண்டக்கூடாது. சிலருக்கு ஷிஃப்ட் மாறி மாறி வேலை செய்ய வேண்டியிருக்கும். அதன் காரணமாக பகல் வேளையில் சிறிது நேரம் தூங்க வேண்டும் போலத் தோன்றும். அதிகாலையில் சீக்கிரமே எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கணவரையும் பிள்ளைகளையும் வேலைக்கும் படிக்கவும் அனுப்பும் இல்லத்தரசிகளுக்கு களைப்பின் காரணமாக, மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தேவைப்படும். அப்படி சில நிமிடங்கள் தூங்கி எழுந்தால்தான், அன்றைய நாளின் மிச்ச நேரத்தை எனர்ஜியோடு கடக்க முடியும், அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

அந்த வகையில், யாராக இருந்தாலும் மதிய வேளையில் 30 நிமிடங்கள் வரை தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமோ என பயப்படத் தேவையில்லை. ‘வெறும் அரை மணி நேரத் தூக்கமெல்லாம் ஒரு தூக்கமா… படுத்ததும் 30 நிமிடங்கள் ஆகிவிடுமே’ என்று சொல்வோர் இருக்கிறார்கள். ஆனால், உடல் எடை அதிகரிக்கக்கூடாது என விரும்புவோர், இதைப் பின்பற்றிதான் ஆக வேண்டும்.
30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவோருக்கு உடல் எடை அதிகரிப்பது மட்டுமன்றி, தூங்கி எழுந்திருக்கும்போது மந்தமாக உணர்வது, நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் போன்ற தேடல் அதிகரிப்பது, குறிப்பாக, இனிப்பான, உப்பான உணவுகளின் மீதான தேடல் அதிகரிப்பது போன்றவையும் ஏற்படலாம் என்கின்றன ஆய்வுகள். எனவே, ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் சற்று இளைப்பாறி, களைப்பையும் போக்க வேண்டும் என நினைத்தால் பகலில் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவதைத் தவிர்க்கவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.