65 லட்சம் பேருக்கு சொத்துரிமை அட்டைகள்: பிரதமர் மோடி காணொலியில் வழங்கினார்

புதுடெல்லி: ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50,000 கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 65 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு சொத்து அட்டைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று வழங்கினார்.

நாட்டில் உள்ள பல கிராமங்களில் பாரம்பரியமாக சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு முறையான சட்ட ஆவணங்கள் இல்லை. இதற்காக கிராமங்களில் உள்ள நிலப் பகுதிகளை ட்ரோன்கள் மற்றும் புவிசார் தகவல் அமைப்பு தொழில்நுட்பம் மூலம் வரைபடம் உருவாக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு சொத்துரிமை அட்டை வழங்கும் திட்டம் (ஸ்வாமித்வா) கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50,000 கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 65 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு சொத்துரிமை அட்டைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று வழங்கினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் கிராம பொருளாதாரத்துக்கு இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். கிராமங்களில் சட்டப்பூர்வமான சொத்து ஆவணம் இல்லாத 65 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, ஸ்வாமித்வா திட்டம் மூலம் இன்று சொத்துரிமை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் இது வரை கிராமங்களில் வசிக்கும் 2.24 கோடி பேர் சொத்து அட்டைகளை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களின் முகத்தில் தன்னம்பிக்கையை பார்க்க முடிகிறது. முறையான சொத்து ஆவணம் இன்றி மக்கள் வசிக்கும் பிரச்சினை பல நாடுகளில் உள்ளது ஐ.நா. ஆய்வில் தெரியவந்தது. இதேபோன்ற சவால்கள் இந்திய கிராமங்களிலும் உள்ளன.

கிராமவாசிகளுக்குச் சொந்தமான சிறிய அளவிலான சொத்துக்கள் பெரும்பாலும் உயிரற்ற மூலதனமாக உள்ளன. இந்த சொத்தை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது. குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவாது. சக்திவாய்ந்த நபர்களால் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு கூட இந்த நிலை வழிவகுத்தது. சொத்துகள் தொடர்பான நீண்டகால தகராறுகளால் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஸ்வாமித்வா திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது.

ஸ்வாமித்வா திட்டத்தின் மூலம் துல்லியமான சொத்துரிமை தகவல்களை அரசு தற்போது வழங்கி வருகிறது. இதன் மூலம் நில சம்பந்தமான பிரச்சினைகள் குறைந்துள்ளன. இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்புகள் முடிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, கோவா, உத்தராகண்ட், ஹரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டியுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பல யூனியன் பிரதேசங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.

ஸ்வாமித்வா திட்டம் மூலம் பெறப்படும் சொத்து அட்டைகளை வைத்து கிராம மக்கள் வங்கிகளில் கடன் பெற்று, சிறு தொழில்களைத் தொடங்கியுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டால், 100 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை அது ஏற்படுத்தும். இத்திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.