கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? – பாஜகவை சாடிய கார்கே

போபால்,

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் புனித நீராடியுள்ளனர்.

இந்த நிலையில், பாஜக தலைவர்கள் மகா கும்ப மேளாவில் புனித நீராடுவதை விமர்சிக்கும் வகையில், கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார். மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மல்லிகார்ஜுன கார்கே, அதன் பின்னர் இது தொடர்பாக பேசியதாவது;

“நரேந்திர மோடியின் பொய்யான வாக்குறுதிகளின் வலையில் சிக்காதீர்கள். கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? அது உங்கள் வயிற்றை நிரப்புமா? நான் யாருடைய நம்பிக்கையை எதிர்த்து கேள்வி கேட்க விரும்பவில்லை. யாராவது மோசமாக உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால், ஒரு குழந்தை பசியால் இறக்கும் சூழலில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் நேரத்தில், தொழிலாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறாமல் இருக்கும் நேரத்தில், இங்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து கங்கையில் நீராடப் போட்டி போடுகிறார்கள்.

கேமராவில் நன்றாகத் தெரியும் வரை அவர்கள் (பாஜகவினர்) தொடர்ந்து நீராடிக்கொண்டே இருக்கிறார்கள். அத்தகையவர்களால் நாட்டிற்கு நன்மை செய்ய முடியாது. எங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. மக்கள் ஒவ்வொரு நாளும் வீட்டில் ‘பூஜை’ செய்கிறார்கள். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள். இதுவே எங்களுக்கு பிரச்சினை உள்ளது.” இவ்வாறு கார்கே கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.