திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக ஏற்கெனவே பதவியில் இருந்தவரை தலைமை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் தங்களது கட்சியின் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தேர்வுக்கான விருப்ப மனுக்களை ஏற்கெனவே மாவட்ட தலைவராக இருந்து வந்த அஸ்வின் என்கிற ராஜசிம்மா மகேந்திரா, மாவட்ட பொதுச் செயலாளர்களான கருணாகரன், ஆர்யா சீனிவாசன் ஆகியோர், பாஜகவின் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சுமதி வெங்கடேசன் ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிலையில், மாவட்ட தலைவர்கள் தேர்வு முடிவுகளை காணொளி காட்சி மூலம் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அறிவித்தார். இந்த நிகழ்வு, திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆவடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏற்கெனவே மாவட்ட தலைவராக இருந்து வந்த அஸ்வின் என்கிற ராஜசிம்மா மகேந்திராவை, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக மீண்டும் மாநில தலைமை அறிவித்தது.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த பாஜகவினரில் ஒரு தரப்பினர் அஸ்வின் என்கிற ராஜசிம்மா மகேந்திராவுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், தேர்தல் அதிகாரிகளான, பாஜக மாநில செயலாளர் சுமதிவெங்கடேசன் உள்ளிட்டோரிடம், பாஜகவின் மற்றொரு தரப்பினர், மீண்டும் அஸ்வின் மாவட்ட தலைவராக தலைமை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், “ஒருவரையே இரண்டாவது முறையாக மாவட்ட தலைவராக தேர்ந்தெடுப்பது நியாயம் இல்லை. மாநிலத்திலும், மாவட்டத்திலும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கே கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற சமூகத்தினர்கள் கட்சி பொறுப்புக்கு வரக்கூடாதா” என, அடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில், ‘அனைவரும் மாநில தலைமை அலுவலகத்துக்கு வந்து உங்கள் குறைகளை கூறுங்கள்’ என தெரிவித்து விட்டு, சுமதி வெங்கடேசன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இச்சம்பவம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.