பெங்களூரு,
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. அதாவது பார்வதி பெயரில் இருந்த 3.16 ஏக்கர் நிலத்தை மூடா கையகப்படுத்திவிட்டு. அதற்கு பதிலாக வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுகுறித்து விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் அனுமதி வழங்கினார். அதன்பேரில், மைசூரு லோக் அயுக்தா போலீசார், முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நில முறைகேடு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதி, மந்திரி சுரேஷ் ஆகிய இருவரும் நாளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேரில் அஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, கர்நாடக மாநிலம் முழுவதும் சித்தராமையாவின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.