நமக்குள்ளே… 30, 40, 50 வயதுகளில் வீட்டுக்குள் காதல்… இருக்கா, இல்லையா?

இந்த உலகம் சுழலும் அச்சு… ஆண் – பெண்ணுக்கு இடையிலான நேசம்தான். அதை அழுந்தச்சொல்லும், மனதின் ஆழத்திலிருந்து மேலெழுப்பிவிடும், கொண்டாடும், கொண்டாடப்படும் ஒரு தினம்… காதலர் தினம்.

வாழ்த்து அட்டைகள் முதல் பரிசுகள் வரை அது வணிகத்துக்கான நாளாக ஒரு பக்கம் ஆக்கப்பட்டிருந்தாலும்… அந்நாளில் இந்த பூமியில் பகிரப்படும், வெளிப்படுத்தப்படும் அன்பின் அளவு முடிவிலி.

இந்த இரண்டு பத்திகளைப் படித்தபோது, இதெல்லாம் 30 வயதுக்குள்ளோருக்கானது என்று ஓர் வெளியாளாக நின்று அதை வாசித்தவர்கள்… கொஞ்சம் உள்ளே வாருங்கள். காதலைக் கொண்டாட, காதல் கொண்ட நெஞ்சம் மட்டுமே போதும். அதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.

30 – 40 வயதிலிருக்கும் பெண்களுக்கு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம், உறவுகள் என அல்லாடுவதில் கணவருக்கு `ஐ லவ் யூ’ சொல்வதற்கான தருணமோ, மனநிலையோ, ஆசுவாசமோ இல்லைதான். ஆனால், அலுவல், தொழில் என ஏதோ ஒரு வெளிப்புற அழுத்தத்தால் கணவர் ஒருநாள் முகம் வாடிப்போனாலும், என்ன ஆயிற்றோ என அவர்கள் மனது சமநிலை இழந்து தவிக்குமே… அதுதானே காதல்?!

40 – 50 வயதிலிருக்கும் ஆண்கள், தங்கள் மனைவிகளின் மெனோபாஸ் கால மூட் ஸ்விங்ஸும், மன வெடிப்புகளும் அந்த வீட்டுக்குள் இறங்கும் சூழலை… பொறுமை, அரவணைப்பு, சகிப்புத்தன்மை எனத் தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு வகையில் சமாளித்து கரையேற்றுகிறார்களே… அது பிரியத்தின் பெரும்நிலை இல்லையா?!

50 வயதுக்கு மேல் சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் எனப் பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பிக்கும். இணையாக, பிள்ளைகளின் பொறுப்புகளும் வளர்ந்து நிற்கும். என்றாலும், ஒருவருக்கு ஒருவர் அவர்கள் மாத்திரை, சிகிச்சை விஷயங்களில் கொடுத்துக்கொள்ளும் கவனமும், நினைவூட்டல்களும், வலியுறுத்தல் களும்… பழுத்த நேசத்தின் ரேகைகள்தானே?!

இப்போது சொல்லுங்கள்… நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது இதில் எந்த நிலை காதல் வாழ்க்கை? `எல்லாம் சரிதான். ஆனா… எதுக்கெடுத்தாலும் சண்டைதான்…’ என்ற சலிப்புக் குரல்கள் சில கேட்கின்றனதான்.

இரண்டு தனிப்பட்ட மனிதர்கள் சேர்ந்து ஒரு கூரையின் கீழ் வாழும்போது, சண்டை, சச்சரவுகள், விலக்கங்கள் இல்லாத ஆண் – பெண் உறவு என்பது சாத்தியமில்லைதானே தோழிகளே?! ஆனால், அந்தச் சின்னச் சின்ன கிழிசல்களை எல்லாம் ஒட்டிவிடும் மைதான்… மையல். லேசான சிரிப்பு விரிகிறது பாருங்கள்… இதே வெட்கத்துடன் அந்த மை டப்பாவை நிரப்பிக்கொண்டே இருங்கள்.

ஆம்… காதலின் சாரம் நிறைந்தே இருக்கிறது உங்கள் வீடுகளில். அதை அவ்வப்போது வார்த்தைகளாக வெளிப்படுத்தித்தான் பாருங்களேன்… நிகழும் ஒரு மேஜிக்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.