லக்னோ: இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை மதிப்பது எப்படி ஒற்றுமையையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்பட செய்கிறது என்பது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
“பிரயாக்ராஜ், வாராணசி மற்றும் அயோத்தி ஆகியவை இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்தி உள்ளன. மகா கும்பமேளாவை எதிர்ப்பவர்களை விட அதன் மூலம் நமது பொருளாதாரம் மேம்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். மகா கும்பமேளா மூலம் பக்தர்கள் இந்தியாவின் நம்பிக்கையை உலகுக்கு உணர்த்தி உள்ளனர். இதுவரை பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 53 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
கடந்த 2016-17ம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சியில் இல்லாதபோது வெறும் 2.35 லட்சம் பக்தர்கள் மட்டுமே அயோத்திக்கு வருகை தந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் சுமார் 14 முதல் 15 கோடிக்கும் அதிகமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
நமது கலாச்சார நம்பிக்கைக்கு மதிப்பு அளிப்பதோடு, அதன் வழியே பொருளாதாரமும் மேம்படுவது முக்கியமான அம்சம் ஆகும். கடந்த 8 ஆண்டுகளில் உத்தர பிரதேச மாநிலம் எண்ணற்ற முன்னேற்றம் கண்டுள்ளது. இப்போது நம் பண்டிகைகளில் சீனப் பொருட்களை பரிசளிக்காமல் ‘ஒரு மாவட்டம்; ஒரு தயாரிப்பு’ பொருட்களை பரிசாக மக்கள் வழங்கி வருகின்றனர்” என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இளம் தொழிமுனைவோர்களுடனான நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனை பகிர்ந்து கொண்டார்.