கேரள மாநிலம், கொச்சியில் வசித்துவரும் நடிகர் பாலா, தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். இவர் 2019-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற 12 வயது மகள் உள்ளார். பாலாவுக்கும், அமிர்தாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. எலிசபத்துக்கும் பாலாவுக்கும் இடையே கருத்துமோதல் உருவானதை அடுத்து இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த தனது முறைப்பெண் கோகிலாவை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் நடிகர் பாலா. பாலா தனக்கு குழந்தை பிறக்கப்போவதாக நேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே கஸ்தூரி என்ற ஃபேஸ்புக் ஐடி-யில் இருந்து எலிசபத் குறித்து சில கருத்துகள் வெளியிடப்பட்டன. அதில் எலிசபத் தன்னிடம் சிகிச்சைக்காக சென்ற பாலாவை பணத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டதாகவும், அவருக்கு தவறான மருந்துகளை கொடுத்ததாகவும் சில கருத்துகள் பகிரப்பட்டன. இதையடுத்து பாலாவுக்கு எதிராக முன்னாள் மனைவி எலிசபத் சமூக வலைதளத்தில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தனது சமூக வலைதள பதிவில் எலிசபத், “பழைய விஷயங்களை வெளியிடுவேன். படுக்கை அறையின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவேன் என பாலா மிரட்டினார். மனதளவில் அவர் என்னை சித்ரவதை செய்து, பாலியல் வன்கொடுமை செய்தார். அவர் பல பெண்களை ஏமாற்றி உள்ளார். ஆதரவற்ற நிலையாலும், பயத்தாலும் இதை டைப் செய்யும்போது என் கைகள் நடுங்குகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை எனக்கு இல்லை என பொதுவெளியில் கூறினார். நான் அவருக்கு மருந்து மாற்றி கொடுத்ததாக கூறுகிறார். நாங்கள் ஃபேஸ்புக் மூலமாகத்தான் அறிமுகம் ஆனோம். நாங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் அவர் வேறு பெண்களுக்கு அனுப்பிய மெசேஜ்களும், வாய்ஸ் கிளிப்புகளும் என்னிடம் இப்போதும் உள்ளன.

அவர் மீண்டும் எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது எனக்கு தெரியவில்லை. சில ஆட்களை அழைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். ஜாதகத்தில் பிரச்னை இருப்பதால் 41 வயதுக்கு பிறகுதான் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என அவரும், அவரது அம்மாவும் என்னிடம் தெரிவித்தனர். எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என பலரிடமும் கூறி பரப்பினார். என்னையும், என் குடும்பத்தினரையும் உடல் ரீதியாக துன்புறுத்தினர். பழைய அனுபவங்கள் இருப்பதால் பாலாவையும், அவரது அடியாட்களையும் கண்டு எனக்கு பயமாக உள்ளது. இனியும் மிரட்டல் தொடர்ந்தல் அவர்மீது நான் புகார் அளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.