தகோத்: குஜராத் மாநிலத்தின் தகோத் என்ற இடத்தில் உள்ள ரயில் இன்ஜின் தொழிற்சாலையில், 9 ஆயிரம் குதிரை திறன் கொண்ட நவீன மின்சார ரயில் என்ஜின் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயில் இன்ஜின் 5,000 டன்கள் எடையுள்ள சரக்கு ரயில் பெட்டிகளை 100 கி.மீ.க்கு அதிகமான வேகத்தில் இழுத்துச் செல்லும். இப்பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘அடுத்த 30 முதல் 40 நாட்களில் இந்த நவீன 9,000 குதிரை திறன் கொண்ட ரயில் இன்ஜின் அறிமுகம் செய்யப்படும். சரக்கு போக்குவரத்தை விரைவாக மேற்கொள்ள ரயில்வேக்கு சக்திவாய்ந்த ரயில் இன்ஜின் தேவைப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் உள்ள மின்சார ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் 12 ஆயிரம் குதிரை திறன் கொண்ட இரட்டை ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது ஒரே ரயில் இன்ஜின் 9 ஆயிரம் குதிரை திறனில் தயாரிக்கப்படுகிறது’’ என்றார்